மலையாள முன்னணி நடிகர்களுக்கும் பார்வதி, ரிமா கல்லிங்கல், ரேவதி, ரம்யா நம்பீசன், பத்மப்ரியா உள்ளிட்ட நடிகைகளுக்குமான மோதல் தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. மீடூ குறித்த மோகன்லாலின் சமீபத்திய அலட்சிய பேச்சு மோதல் தீயை மேலும் விசிறிவிட்டுள்ளது.

நடிகை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் திலீப் கைது செய்யப்பட்ட போது தொடங்கியது இந்த மோதல். திலீபை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள தீர்மானம் போட்டதும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலுக்கு எதிராக மேலே குறிப்பிட்ட நடிகைகள் அணி திரண்டனர். நேரடியாக தாக்கி பேட்டிகள், அறிக்கைகள் வெளியிட்டனர்.

அதற்கு முன்பு மம்முட்டி படத்தில் இடம்பெற்றிருந்த பெண்கள் விரோத காட்சியை நடிகை பார்வதி கண்டித்தார். அதற்கு, மம்முட்டி ரசிகர்கள் மோசமான வார்த்தைகளால் பார்வதியை வசைபாடினர். இப்படி மலையாளத்தின் இருபெரும் நடிகர்கள் நடிகைகளின் அதிருப்திப் பட்டியலில் இருக்கும் நிலையில், அபுதாபி சென்ற மோகன்லால், மீடூ குறித்து சில கருத்துகளை கூறினார்.

மீடூ அர்த்தமே இல்லாத விஷயம். அதுவொரு பேஷன் ட்ரெண்ட். மலையாள திரையுலகில் இதுபோன்ற பிரச்சனைகள் இல்லை. புதிதாக பேசி பிரச்சனைகளை உருவாக்க வேண்டியதில்லை. ஆண்களும் மீடூ புகார்களை முன்வைக்க வேண்டும். இந்த மீடூ ட்ரெண்ட் கொஞ்ச நாளைக்குதான் என கூறியிருந்தார். இதற்கு நடிகை ரேவதி பதிலடி கொடுத்துள்ளார்.

“மீடூவை ஒரு நடிகர் பொருளற்ற ட்ரெண்ட் என்கிறார். இப்படிப்பட்ட மனிதர்களுக்குள் எப்படி கொஞ்சமாவது சென்சிடிவிட்டியை கொண்டு வருவது? அஞ்சலி மேனன் சொன்னது போல் செவ்வாய் கிரகத்திலிருந்து இப்போதுதான் வந்திறங்கியவர்களுக்கு பாலியல் அத்துமீறலுக்குள்ளாவதன் வலியும், அதனை வெளியில் சொல்வதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் எதுவும் தெரியாது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மலையாளத்தின் முன்னணி நடிகர்களுக்கு எதிரான நிலைப்பாடை எடுத்திருப்பதால் பார்வதி, ரிமா கல்லிங்கல், ரம்யா நம்பீஸன் போன்றவர்களுக்கு மலையாள சினிமாவில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட இந்த மூவருக்கும் படங்களே இல்லை. இதேநிலைதான் பத்மப்ரியா, ரேவதி உள்பட நடிகர்களை எதிர்க்கும் அனைத்து நடிகைகளின் நிலையும்.

அம்மா என்ற பெயர் கொண்ட மலையாள நடிகர்கள் சங்கம் பெண்களுக்கு எதிராக இருப்பது நகைமுரண்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here