பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து  வாட்ஸ் அப்பில் (கட்செவி அஞ்சல்) அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதில் கல்வீசித் தாக்கியதில் 8 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. 3 போலீஸார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கலைத்தனர். தொடர்ந்து பொன்னமராவதி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள ஒரு சமூகத்தினரை தவறாக சித்திரித்து கட்செவி அஞ்சலில் பதிவிட்டுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அச்சமூகத்தினர் ஆயிரக்கணக்கானோர் வியாழக்கிழமை இரவு பொன்னமராவதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். முன்னதாக, அண்ணா சாலை, நாட்டுக்கல் ஆகிய பகுதியில் உள்ள கடைகள் சேதப்படுத்தப்பட்டன. சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் கூடுதல் போலீஸார் காவல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர். அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பொன்னமராவதி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் திரண்ட அச்சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உடனடி நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை நோக்கி திரண்டு வந்தனர். தகவலறிந்த ஐ.ஜி வரதராஜூலு, டிஐஜி லலிதா லட்சுமி சம்பவ இடத்துக்கு வந்து,  அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், போலீஸாரின் 8 வாகனங்கள் சேதமடைந்தன. மூன்று போலீஸார் மற்றும் பொதுமக்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தியும் நிலைமை கட்டுக்குள் வராததால், துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கலைத்தனர்.  இச்சம்பவத்தால், பொன்னமராவதி பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.  பொன்னமராவதி ஒன்றியத்தில் ஆங்காங்கே சாலையின் குறுக்கே மரங்களைப் போட்டு அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி ஒன்றியத்தில் பதற்றமான சூழல் நிலவியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

சட்டம் – ஒழுங்கு அமைதியாக உள்ளது: ஆட்சியர்

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட புதுகை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  பொன்னமராவதி உள்பட 42 கிராம ஊராட்சிகளில் 144 தடை உத்தரவு வரும் 21 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பொன்னமராவதியில் தற்போது சட்டம் ஒழுங்கு அமைதியாக உள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகள் இங்கு வந்துள்ள நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Courtesy: dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here