வாடிப்பட்டியிலிருந்து வாஷிங்டனுக்கு….

தென்னிந்திய பெண் தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டை அமெரிக்கத் தூதரகம் ஒருங்கிணைத்தது.

0
622
Deepali Shital Gotadke (Left) and S. Josephine Arockia Mary (Right)

”வீட்டுக்கொரு தேனீ பெட்டி; குடும்பத்திற்கு ஆயுள் கெட்டி” என்பதை உலகிற்கான ஆரோக்கிய மந்திரமாக முன்வைக்கிறார் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ஜோஸ்பின்; 11 வருடங்களுக்கு முன்னர் 5000 ரூபாய் முதலீட்டில் ஜோஸ்பின் ஆரம்பித்த தேனீ வளர்ப்பு, சென்ற வருடம் இரண்டரை கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட பிசினஸாக வளர்ச்சியடைந்துள்ளது. இப்போது 8,000க்கும் அதிகமான தேனீ பெட்டிகளில் தேன் எடுத்து விற்பனை செய்கிறார். ”தேனீ வளர்ப்பிலும் பெட்டியைப் புதிது புதிதாக வடிவமைப்பதிலும் குறையாத ஆர்வம்தான் எனக்குப் பெரிய தெம்பைத் தருகிறது” என்கிறார் ஜோஸ்பின். தமிழ்நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் நாவல் தேன், வேம்புத் தேன், முருங்கைத் தேன், துளசித் தேன், இஞ்சித் தேன், பூண்டுத் தேன் என்று 30 வகையான தேன்களை வினியோகம் செய்கிறார். ஹைதராபாதில் நடந்த உலக தொழில்முனைவு மாநாட்டின் (Global Entrepreneurship Summit 2017) ஒரு பகுதியாக சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சென்னை ஐஐடியில் ஏற்பாடு செய்திருந்த தென்னிந்திய பெண் தொழில்முனைவோர் மாநாட்டில் ஜோஸ்பின் பங்கேற்றார். இனி உலகம் முழுமைக்கும் தமிழ்நாட்டின் ஆரோக்கியமான தேன் சென்று சேர்வதற்கான புதிய வாசல் திறந்திருக்கிறது.

“நாம் வளர்க்கும் தேனீ கொட்டினால் உடலுக்கு நல்ல எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்; தேன் சாப்பிட்டால் மூட்டு வலி வராது; தேனுக்கு நிகரான உணவு கிடையாது” என்கிறார் ஜோஸ்பின். கிலோ தேனுக்கு 400 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கிறார். தமிழ்நாடு முழுவதுமுள்ள இயற்கை அங்காடிகள்தான் இவருடைய வினியோகத் தலங்கள். தமிழ்நாட்டில் ஜோஸ்பின் கனவு காண்கிற பழுப்புப் புரட்சி நடந்தால் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள்; இதனை நாடு முழுவதும், ஏன் உலகம் முழுவதும் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது இப்போது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த தீபாலி கோதட்கே மென்பொருள் பொறியாளர்; 2000ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குச் செல்ல விசா கேட்டபோது “Prospective Immigrant” (குடியேறும் சாத்தியமுள்ளவர்) என்று சொல்லி விசா மறுக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு முதல் மின் வணிகத் தளத்தை ஆரம்பித்து இன்று நாடு முழுவதும் கிளை பரப்பி நிற்கிறார். ”வெளிநாடு வாழ் இந்திய மக்கள் எனது தளங்கள் மூலமாக இந்தியாவிலுள்ள 300 நகரங்களிலுள்ள தமது உறவினர்களுக்குப் பரிசுப் பொருள்களை அனுப்புகிறார்கள்; உலக அளவில் இதனை விரிவாக்கம் செய்வதற்கு இந்தச் சென்னை மாநாடு நிச்சயம் பயன்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார் தீபாலி. ஜோஸ்பின், தீபாலி போன்று 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய தொழில் முனைவோருக்குத் தங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான திறன் வளர்ப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம். ”தங்களது வணிகத்தை முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்லும் Pitching பயிற்சி வழங்கப்பட்டது; தொழில்முனைவோருக்குத் தேவையான வழிகாட்டிகளை (Mentor) வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன” என்று சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தலைமை அதிகாரி ராபர்ட் பர்ஜெஸ் கூறினார்.

தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளிலுள்ள பெண் தொழில்முனைவோருக்குப் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்ததாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தார்கள். “Women First; Prosperity For All” (பெண்களே பிரதானம்; அனைவருக்கும் செழிப்பு) என்கிற தலைப்பில் ஹைதராபாதில் நடந்த உலக தொழில்முனைவு மாநாட்டின் நோக்கத்துடன் பொருந்திப் போகும் வகையில் பெண் தொழில்முனைவோருக்குத் திறன் மேம்பாட்டையும் புதிய வாய்ப்புகளையும் உறுதி செய்த நிகழ்வாக இந்தச் சென்னை மாநாடு அமைந்தது. இந்த நிகழ்வை கேர் எர்த் டிரஸ்டும் சேர்ந்து ஒருங்கிணைத்திருந்தது.

இதையும் படியுங்கள்: நீங்கள் பார்க்காத அமெரிக்கா

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்