வாக்கு எந்திரங்களில் நடந்த மோசடியைவிட இந்துக்களின் மனது மோசடி செய்யப்பட்டிருக்கிறது

0
849

மோடிக்கு தெரிந்திருக்கிறது இந்துக்களின் மனதை இலகுவாக வென்றுவிடலாம் என்று. கேதர்நாத் பயணம் சென்று இந்துக்களின் மனதை வென்றிருக்கிறார்.   

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறிய முறைகளை தேர்தல் முடிவுகள் பின்பற்றுமேயானால் வாக்கு எந்திரங்களில் மோசடி நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழும்.  

தேர்தல் முடிவுகள் நமக்கு கூறுவது என்னவென்றால் வாக்கு எந்திரங்களில் நடந்த மோசடியைவிட இந்துக்களின் மனது மோசடி செய்யப்பட்டுள்ளது .  

தான் சென்ற புனித யாத்திரைகளை  தைரியமாக கேமாராக்கள் முன்னிலையில் காட்டினார் பிரதமர் மோடி. அவர் செய்த தியானம் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான இந்துக்களின் வீட்டு தொலைக்காட்சிகளில் லைவ் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டது. மக்களின் உணர்வுகளை எப்படி வெல்ல வேண்டும் என்பதில் மோடி எவ்வாறு  நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருந்தார்?  புனித யாத்திரைகளை தொலைக்கட்சிகளில்  காட்டுவதன்   மூலம்  மதம் சார்ந்த நம்பிக்கைகளை  இந்து வெகுஜனங்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர் எவ்வாறு நினைத்தார்? 

இந்துக்களின் மனதில் ஆன்மீகத்துக்கான வெற்றிடம் இருப்பதால் புனித யாத்திரையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று மோடி மிக உறுதியாக நம்பியிருக்கிறார்.     

இந்து மத நம்பிக்கை என்பது பன்முகத்தன்மைக் கொண்டது. இது கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைப் போன்றது அல்ல . இது சகிப்புத் தன்மைக் கொண்டது. அனைத்து மதங்களிலுமே இந்து மதம்தான் ஆக்கப்பூர்வமானது மற்றும் மனிதாபிமானம் கொண்டது . 

இந்த சிறப்புகள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு மொராரி பாபு, அஸ்ரம் பாபு, பாபா ராம்தேவ், சத்குரு ஜகி வாசுதேவ் ஆகியோர் உருவாகினர். 

இவர்கள் இந்துக்களின் ஆன்மீக தலைவர்களாக இந்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.  

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் அதன் கிளை அமைப்போடு சம்பந்தப்பட்ட மக்கள் புனிதர்களாக பார்க்கப்பட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அரசியல் அமைப்பு.  ஆனால் அந்த அமைப்பை இந்துக்களின் மன உணர்வை பிரதிபலிக்கும் மத அமைப்பாக கருதுகிறார்கள். 

சாமியார்கள் இவ்வுலகின் எவற்றுக்கும் கட்டுப்படாதவர்கள். இவ்வுலக வாழ்வைத் துறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இங்கு பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். இது மதம் சார்ந்தது அல்ல என்பது அவர்களுக்கு தெரிந்தும்கூட அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் அவர்கள் பல அரசியல் இயக்கங்களை வழிநடத்தி வருகிறார்கள். அந்த இயக்கங்கள் பாஜக என்ற அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. 

விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தளம், ஆர் எஸ் எஸ் – இயக்கங்களை இந்துக்கள் தங்கள் ஆன்மீக உணர்வுகளை பிரதிபலிக்கும் இயக்கங்களாக பார்க்கின்றனர். ஆன்மீகம் என்பது தனக்கானது, தனிப்பட்டது  என்பதை மக்கள் மறந்துவிட்டனர். 

ஹஜ் யாத்திரீகர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை இந்துக்கள் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால் அவர்கள் தங்களது புனித யாத்திரைகள் எவ்வாறு வணிக மயமாக்கப்பட்டுவிட்டது என்பதை நினைக்க மறந்துவிட்டனர். மானசரோவர் யாத்திரை, கும்ப மேளா, பத்ரிநாத்/கேதர்நாத் யாத்திரைகளுக்கு மாநிலங்கள் மானியம் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது . 

இந்துக்கள் பல மதசம்பந்தமான விழாக்களை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளிடம் கொடுத்துள்ளனர். இதனால் இந்துமதத்தின் பன்முகத்தன்மையை இழந்து இது ஒருமுகத்தன்மையை உருவாக்கியுள்ளது . இந்துக்கள் தங்கள்  மத விழாக்களை விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளுக்கு தாரை வார்த்துள்ளனர்.  

கன்வாரியாக்கள் (சிவ பக்தர்கள்) புனித யாத்திரைக்கு போகும் போது மூவர்ண தேசியக் கொடியை பயன்படுத்துகின்றனர்.  

மேற்கு வங்கத்தில் நடக்கும்  ராம நவமி ஊர்வலம் மதம் சார்ந்தது அல்ல என்று இந்துக்களுக்கு தெரியும்.   இந்து மதத்தின் பெயரால் அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் ஊர்வலம் ராம நவமி ஊர்வலம். பீகார், உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் அரசியல் கட்சிகள் தங்களை  வளர்த்துக் கொள்ள இந்து மத விழாக்களை  எடுத்து நடத்தி வருகின்றன. இது குறித்து இந்துக்களும் எந்த விதமான எதிர்ப்புகளையும் தெரிவிக்கவில்லை. 

இந்துமதத்தை அரசியல் கட்சிகள் தேசிய மயமாக்குவதால் இந்துக்கள் தங்களது பிரபஞ்ச உணர்வை இழந்துள்ளனர். அவர்களது கண்ணோட்டத்தில் இந்து மதம் குறுகிவிட்டது. காந்தி இறந்த பிறகு இந்து மதம் பற்றிய முக்கியமான விவாதங்கள் இங்கு நடத்தப்படவில்லை.  காந்தி, வினோபா பாவே போன்றோர் இந்துமதத்தையும், பகவத் கீதையயும் மக்கள்  புரிந்துக் கொள்ள உதவினர். அவர்களுக்கு பிறகு யாரும் அம்மாதிரியான முயற்சிகளை எடுக்கவில்லை.  

இஸ்லாம் மதம் சமத்துவம் பற்றி கூறும்போது இந்துக்களுக்கு  விசித்திரமாக இருந்தது. கிறிஸ்தவ மதம் சேவை , மற்றும் அக்கம்பக்கத்தினருடன் அன்பு பற்றி கூறும்போது இந்துக்களுக்கு புதிதாக இருந்தது. 

இந்து மதம்   இதற்கெல்லாம்  பதிலளிக்காமல் ஒரு கடினமான ஓட்டுக்குள் சென்றுவிட்டது.  

இந்துமதம் விளக்கும் வெவ்வேறுத் துறைகள், தத்துவ ஈடுபாடுகள், மரபுகள் குறித்த பேச்சுக்களோ,  விளக்கமளிக்கும் புத்தகங்களோ, ஆக்கபூர்வமான உரையாடல்களோ இல்லை. இந்து மதம் பற்றி ஏதாவது கூறவேண்டுமென்றால் அது மகிமை பெற்றது . இந்துமதத்தில்  உருவாகிய தத்துவவாதிகள் என்று பார்த்தால் ஓஷோவும், சத்குரு ஜக்கியும்தான். 

சுருங்க கூறினால்  இந்துமதம் ஆன்மீக லட்சியத்தையும், தைரியத்தையும் இழந்துவிட்டது. எல்லாமே  வேதங்களில் இருந்து பெற்றுவிட்டோம் என்று கூறுவது எதைக் காட்டுகிறது என்றால்  கடந்த கால மகிமைகளை சுமந்து திரியும் முக்கியமற்ற கூலிகளாக இருக்கிறோம் என்று . நமது மூதாதையர்களின் மகிமைகளை நமது தோள்களில் சுமக்க நமது விதியில் எழுதப்பட்டிருக்கிறது . 

தற்போது இருக்கும் சூழலில் இந்து மதம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்து மதம் அதன் தனித்துவத்தை தக்க வைக்குமா? இந்த அரசியல் கட்சிகள் இந்து மதத்தை மேலும்  இழிவுபடுத்துமா? யோகி ஆதித்யநாத், பிரக்யா தாக்கூர், நரேந்திர மோடி, அமித் ஷா போன்றவர்கள் இந்து மதத்தின் பிரதிநிதிகளாக நிறுத்தபடுவதால் இந்துமதம் மேலும் இழிவு படுத்தப்படுமா?

இந்துக்கள் தங்கள் மனது மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து அதிலிருந்து வெளியேவரும் வழிகளை யோசிக்க வேண்டிய தருணம் இது . 

Apoorvanand – teaches at Delhi University.

thewire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here