வாக்கு எந்திரக் கோளாறு விவகாரம்; தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை ; ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள்

0
239

மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில்,  வாக்குப்பதிவு எந்திர முறைக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை  டெல்லியில் சந்திரபாபு நாயுடு தலைமையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சிகள், வாக்குப்பதிவு எந்திரத்தைப் பற்றி   அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் சார்பில் ‘‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் இந்த வாக்குப்பதிவு எந்திர முறைகேடு தொடர்பான கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

அந்த கருத்தரங்கத்தின் முடிவில் மின்னணு வாக்கு எந்திரங்களில் ஏற்பட்டு வரும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஒப்புகை தணிக்கைச் சீட்டு எந்திரங்கள் மூலம வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எங்களுக்கு சந்தேகங்கள் உள்ளது. வாக்காளரின் நம்பிக்கை வாக்குச்சீட்டு முறை மூலமே நிலை நிறுத்தப்படும். 

ஜெர்மனி, நெதர்லாந்து, ஐயர்லாந்து போன்ற மிகவும் முன்னேறிய நாடுகளே, முன்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திர வாக்கு முறையைப் பயன்படுத்தினர். ஆனால், இப்போது அவர்கள் வாக்குச்சீட்டு முறைக்கு மாறியுள்ளனர். அவர்கள் ஏன் அப்படி சென்றார்கள் என்பது குறித்தும் தெளிவாக கூறியுள்ளனர்’ என்றார்.

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தன. அது குறித்து பேசிய நாயுடு, ‘தேர்தல் மிகுந்த குழப்பத்துடனும், மிகுந்த சிக்கல்களுடனும் நடந்துள்ளது. 150 தொகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். ஆந்திராவில் நடந்த தேர்தலில் 4,583 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை’ என்றார். அவரின் இந்த கருத்துக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து நாயுடு, தேர்தல் ஆணையம் மீதும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். 

தேர்தல் ஆணையம் பற்றி நாயுடு, ‘இதைப் போன்ற ஒரு பொறுப்பற்ற, உணர்வற்ற தேர்தல் ஆணையத்தை நான் பார்த்ததே இல்லை. ஜனநாயகத்தையே அவர்கள் கேலிப் பொருளாக மாற்றியுள்ளார்கள். தேர்தல் ஆணையம், பாஜக-வின் கிளை அலுவலகமாக மாறியுள்ளது’ என்றும் கூறினார்.  

தற்போதைய தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் வேறொரு கட்சிக்கு வாக்குகள் விழுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் சிங்வி 

வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு எந்திரங்களில் 7 வினாடிகள் வரை ஒளிர வேண்டிய விளக்குகளானது 3 வினாடிகளில் அணைந்து விடுகிறது.

சரியான வகையில் நேரடி களஆய்வு செய்து பரிசீலிக்காமல் ஆன்லைன் மூலம் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க எங்களிடம் ஏராளமான புகார்கள் உள்ளன.

அவற்றில் வாக்குப்பதிவு எந்திரங்களில் குளறுபடி பிரச்சனை மிக முக்கியமானதாகும். எனவே,வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையில்  50 சதவீதம் அளவுக்கு வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு எந்திரங்களை அமைக்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக தீர்மானித்துள்ளன.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமானது போதிய அக்கறை காட்டவில்லை என்று நாங்கள் கருதுவதால் , இந்தக் கோரிக்கையை முன்வைத்து நாங்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம் என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here