வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு; ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சீராய்வு மனு தாக்கல்

0
131

ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் உள்ள 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி சரிபார்ப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை 21 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளது . 

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஒரு பேரவைத் தொகுதியில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும், மக்களவைத் தேர்தலின்போது, தலா ஒரு பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒரு வாக்குச்சாவடியிலும் பதிவாகும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு எண்ணுவதால் முடிவுகள் வெளியிட 1 மணி நேரம் தாமதமாகும் என்று கூறியிருந்தது. 

இதை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக, பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


 அதில், “50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டுமெனில் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாள்கள் தாமதமாகும்; மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தற்போது அமல்படுத்துவது சாத்தியமல்ல’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.


 இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “தேர்தல் நடைமுறைகளில் நேர்மையை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு 6 நாள்கள் கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது 

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்குப் பதிலாக, 5 வாக்குச்சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நியாயமானதாக இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில், வெறும் 2 சதவீத அளவு வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கூறுவது போதுமானதாக இல்லை. 


இது, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் இருந்த நிலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இல்லை. 
மனுதாரர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள விவகாரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட போதிலும், அதற்கான முழு பலனும், தேவையான தீர்வும் மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.


ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளில் இருக்கும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்ப்பது என்பது, தேர்தல் நடைமுறைகளில் மக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்த போதுமானதாக இருக்காது. 
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலின்போது, பல வாக்குச்சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிவரச் செயல்படவில்லை. 
அங்கு 618 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு தாமதமானதுடன், 20 வாக்குச்சாவடிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 


முன்னதாக, தேர்தல் நடைமுறைகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகள், பதிவான வாக்குகளுடன் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கோரி தெலுங்கு தேசம் தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 


[இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here