வாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன் மீண்டும் இணைப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

போலி வாக்காளர்களை தடுக்கும் பொருட்டு, வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைக்க அதிகாரம் வழங்க வலியுறுத்தி, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதியிருந்தது. ஆதார் எண்களை தர இயலவில்லை என்றாலும் கூட, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனிடையே வாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன் இணைக்கும்போது என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தை சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அதன்படி பாதுகாப்பு அம்சங்கள் குறித்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில், வாக்காளர் அட்டைகளை மீண்டும் ஆதார் எண்களுடன் இணைப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் சாதகமாக பதிலளித்துள்ளதால், வாக்காளர்கள் விரைவில் தங்கள் வாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன் இணைக்குமாறு கேட்கப்படலாம். தேர்தல் ஆணையம் ஏற்னெனவே 38 கோடி வாக்காளர் அட்டைகளை ஆதார் உடன் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் அரசு சேவைகளை பெற மட்டுமே ஆதார் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here