நாட்டில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருந்து வருவது இன்னும் தொடர்கிறது. இதனை தடுத்து வாக்காளர் பட்டியலை சீர் செய்வதற்காக, ‘வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்களை கையாளும் அதிகாரம் வேண்டும்’ என, தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், வாக்காளர் பட்டியலில் புதியதாக விண்ணப்பிப்பவர்களிடமும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களிடமும் ஆதார் எண்களை கேட்டுபெறுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. 

2015 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தடையாக உள்ளது. 

இந்த நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. 

ஏற்கனவே, வாக்களிப்பதில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞரும், பாஜக மூத்த தலைவருமான அஸ்வினி உபாத்யாய மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.