வாகன விபத்தில் மரணமடைந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு – மத்திய அரசு

0
189

வாகன விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.2.5 லட்சமும் இழப்பீடு வழங்கும் வகையில் மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆட்சியில் மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமலேயே ஆட்சி முடிவுக்கு வந்தது.

எனவே மக்களவை கூட்டத்தில் நேற்று சாலை போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் இந்த மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:-

மோட்டார் வாகன விபத்தில் மரணமடையும் வாகன உரிமையாளரோ அல்லது காப்பீடுதாரரோ ரூ.5 லட்சம் இழப்பீடும், படுகாயம் அடைபவர் ரூ.2.5 லட்சம் இழப்பீடும் பெறுவார்.

சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் அதிகரிப்பு, ஆன்லைன் மூலம் கற்பவர்களுக்கான ஓட்டுநர் உரிமம் (எல் லைசென்ஸ்), விபத்தில் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விரைவான உதவி கிடைக்கும் வகையில் எளிமையான வாகன காப்பீடு, விபத்தில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நல்லிரக்க பண்புள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது.

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிப்பது, ஓட்டுநர் உரிமம் காலவதியாகி ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரு ஆண்டாக உயர்த்துவது, தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க அனுமதி போன்ற அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் உள்ள சிலவற்றுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில உரிமைகளை பறிப்பதாக உள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள்.

இதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறியதாவது:-

நாட்டில் உள்ள 30 சதவீத ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை. ஒவ்வொரு வருடமும் விபத்துகளில் 1.5 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். 5 லட்சம் பேர் காயமடைகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் இந்த சட்டத்தை நிறைவேற்ற தவறினாலும், 5 ஆண்டில் விபத்துகள் 3 முதல் 4 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 15 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது.

மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளை பறிக்க நினைக்கவில்லை. இந்த சட்டதிருத்தம் மூலம் மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும். எனவே இந்த மசோதாவை இந்த அவை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு நிதின்கட்காரி கூறினார்.

மக்களவையில் நேற்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்த ஒரு சட்டம் இல்லாத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சை அளிக்கும் நாடாக இந்தியா மாறிவிட்டது. இதில் சில ஆஸ்பத்திரிகள் தவறாகவும் நடந்துகொண்டன. இது வணிகமயமாகவும், நெறியற்றதாகவும் மாறிவிட்டது.

எனவே இதனை ஒழுங்குபடுத்த தேசிய மற்றும் மாநில அளவில் வாடகைத்தாய் வாரியம் அமைக்க வழிகாணப்படுகிறது. சட்டபூர்வமாக திருமணம் செய்துகொண்ட இந்திய தம்பதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பின்னரே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தம்பதியாக உள்ள 23 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களும், 26 முதல் 55 வயது வரையிலான ஆண்களும் இதற்கு தகுதியுள்ளவர்கள்.

25 முதல் 35 வயதுள்ள பெண்கள் திருமணமாகி தனக்கு சொந்தமாக ஒரு குழந்தை இருந்தால் நெருங்கிய உறவினரான தம்பதிக்கு வாடகைத்தாயாக ஒருமுறை மட்டுமே செயல்படலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here