அமெரிக்காவும் , சீனாவும் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளனர். முதலில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தது. அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இருநாடுகளும் 34 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதித்தனர். இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் நேரடியாக தொடங்கியது.

இந்நிலையில் மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள, உணவு , கனிமம் உட்பட 6,000-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் வரி உயர்த்தப்போவதாக டிரம்ப எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களில் நாய் மற்றும் பூனை உணவு, பேஸ்பால் கையுறைகள், தரைவிரிப்புகள், கதவுகள், மிதிவண்டி, ஸ்கைஸ், கோல்ஃப் பைகள், கழிப்பறை காகிதம் மற்றும் அழகு பொருட்கள், கார் டயர்கள், தளபாடங்கள், மர பொருட்கள், கைப்பைகள் மற்றும் சூட்கேஸ்கள், நுகர்வோர் பொருட்கள் ஆகியவையும் அடங்கும்.

இதுகுறித்து ஆகஸ்டு மாதத்திற்குள் பொதுமக்களின் கருத்து கேட்டறிந்த பின்பு , இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஒரு வருடத்திற்கும் மேலாக, டிரம்ப் நிர்வாகம், சீனா தனது நியாயமற்ற நடைமுறைகளை நிறுத்தி, அதன் சந்தையைத் திறந்து, உண்மையான சந்தை போட்டியில் ஈடுபட வலியுறுத்தியது என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 5,000 கோடி டாலர் மதிப்புக் கொண்ட சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து அதை அமலுக்கு கொண்டு வந்தது அமெரிக்கா.

32

உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகள் இவ்வாறு வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது உலகளாவிய வளர்ச்சியை தாக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.