வர்தா புயலுக்குப் பின் இரண்டு வாரங்கள்: இருளிலிருந்து மீளாத கும்மிடிப்பூண்டி முகாம்

0
366
வர்தா புயல் தாக்கி 15 நாட்களாகியும் கரண்ட் இல்லாமல் கும்மிடிப்பூண்டி முகாம்வாழ் இலங்கைத் தமிழ் மக்கள் அவஸ்தைப்படுகிறார்கள்.

கடந்த 12ந்தேதி வீசி அடித்த வர்தா புயல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியிலும் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது; கும்மிடிப்பூண்டியிலுள்ள இலங்கைத் தமிழர்கள் முகாமிடம் தனது கொடூர முகத்தைக் காட்டிவிட்டுப் போயிருக்கிறது வர்தா புயல்; புயல் தாக்கி பதினைந்து நாட்களாகியும் இன்னமும் இலங்கைத் தமிழ் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை; அடிப்படை வசதியின்றித் தவிக்கிறார்கள்; தமிழகத்தில் மொத்தம் 107 இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்கள் உள்ளன; இவற்றில் 64208 அகதிகள் வாழ்கிறார்கள். 40 ஆயிரம் பேர் வெளிப் பதிவில் வசிக்கிறார்கள். வெளிப்பதிவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வாடகைக்கு வீடு எடுத்து வசிக்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் தங்களைப் பற்றிய விபரங்களைப் பதிவு செய்கிறார்கள். தொடர்ந்து காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஒரு குடும்பத்திலுள்ள பெரியவர்களுக்கு ரூபாய் 1000, 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூபாய் 750, குழந்தைகளுக்கு ரூபாய் 500 அரசின் நிவாரணத் தொகையாக மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. முகாம்களில் வசிப்பவர்கள் கியூ பிராஞ்ச் போலீசாரின் நேரடி கண்காணிப்பில் உள்ளார்கள்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள முகாம் தமிழ்நாட்டிலுள்ள பெரிய முகாம்களில் ஒன்று. 1990ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இங்கு தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் 2500 குடும்பங்கள் இங்கு வசித்தார்கள். தற்போது 750 குடும்பங்கள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டார்கள். புயலால் பாதிப்படைந்த மக்களைச் சந்தித்து அங்குள்ள நிலவரத்தைப் பார்வையிட்டேன்; ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட மண் வீடுகள் அனைத்தும் பலமாக சேதமடைந்திருந்தன; தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட கூரைகள் அனைத்தும் புயலால் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன; வீடுகள் கூரையின்றிக் காணப்படுகின்றன; மின் கம்பிகள் அறுந்து தரையில் கிடந்தன. சாலை முழுவதும் பெரிய மரங்கள் சாய்ந்து கிடந்தன; மக்கள் குடிநீருக்காக போராடிக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் முகாம் முழுவதும் கலவர பூமியாகவே காட்சியளித்தது.

மக்கள் கூடியிருந்த ஒரு இடத்துக்குச் சென்று நான் இப்போது டாட் காமிலிருந்து வருகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்; ஊடகம் என்று சொன்னதுமே அவர்களது முகத்தில் பீதி தொற்றிக்கொண்டது; பத்திரிகை பேட்டி என்றதும் அவர்களிடம் மிகுந்த பயம் காணப்பட்டது. அவர்களது பெயரையோ, படத்தையோ வெளியிட மாட்டேன் என்ற வாக்குறுதியுடன் அவர்களிடம் பேச ஆரம்பித்தேன்.

”தம்பி தப்பா எடுத்துக்காதீங்க; பத்திரிகைகாரங்க வந்திருக்கிறது தெரிஞ்சுச்சுன்னா அடுத்த பத்து நிமிசத்துல இங்க போலீஸ் வந்துரும்; எங்களை மீறி மீடியாகிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க. அப்படியே மீறிப் பேசுனா எங்களுக்குத் தரப்படுற நிவாரணம் கட்டாயிடும்; புயல் வந்து இன்னைக்குப் பதினைஞ்சு நாள் ஆச்சு தம்பி. இது வரைக்கும் , இந்த மரத்தையெல்லாம் எடுத்து அப்புறப்படுத்தல; சின்ன சின்ன மரத்தயெல்லாம் எங்க மக்களே எடுத்து அப்புறப் படுத்திட்டாங்க. இது மாதிரி பெரிய மரங்கள எங்களால அப்புறப்படுத்த முடியல. புயலுக்கு முந்தின நாள் மின்சாரம் துண்டிச்சாங்க; இன்னைக்குப் பதினைஞ்சு நாளாச்சி; இதுவரைக்கும் மின்சாரம் வரல.”

”அந்தப் பக்கம் உள்ளூர் மக்கள் வசிக்கிற பகுதிக்கெல்லாம் மின்சாரம் வந்துடுச்சு; எங்க பகுதிக்கு வரல; அகதிகளா இருக்குறதால அதிகாரமா பேசமுடியல; அப்படியிருந்தும் தாலுகா ஆபிஸில போய் கேட்டோம்; அதுக்கு அவங்க கரண்டு உங்களுக்கு ரொம்ப முக்கியமான்னு கேட்டாங்க; மரத்தையாவது அப்புறப்படுத்தச் சொன்னோம்; அதை நீங்களே சரி பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க; மரத்தையெல்லாம் அப்புறப்படுத்தினதுக்குப் பிறகுதான் மின்சாரம் வருமுன்னு சொல்லிட்டாங்க; கொசுக்கடியில குழந்தைங்கள்லாம் ரொம்ப சிரமப்படுறாங்க; கிருமி நாசினிகூட தெளிக்கல; தொற்றுநோய் பரவுமோன்னு அச்சமா இருக்கு’’ என்று கவலை தெரிவித்தார்கள்.

’’உங்களுக்கு யாராவது குடிக்க தண்ணியோ சாப்பாடோ கொடுத்தார்களா’’ன்னு கேட்டபோது ’’இல்லீங்க தம்பி; புயலுக்கு மறுநாள் காலேஜ் பசங்க அஞ்சாறு பேர் வந்து பிரட்டும் பிஸ்கட்டும் கொடுத்துட்டுப் போனாங்க, குடிதண்ணி இதுவரைக்கும் வரவே இல்லை” என்றார்கள்; ”சரி உங்க மக்களோட வாழ்வாதாரம் எப்படி இருக்கு?” ”வாழவே பிடிக்காம வாழ்ந்துகிட்டு இருக்கோம்; இதுல என்னத்த வாழ்வாதாரத்தப் பத்தி சொல்றது? அரசாங்கம் கொடுக்குற நிவாரணம் எங்களுக்கு மாசம்தோறும் வருது; இப்ப இருக்குற பணப்பிரச்சனயால் கொஞ்சம் தாமதமாயிருக்கு; இப்ப இருக்குற விலைவாசிக்கு அது பத்தாது. இங்க இருக்குறவங்க வெளியூருக்கு வேலைக்குப் போனால் 28 நாளுக்கு ஒரு முறை இங்க செக்கிங் வருவாங்க. அவங்க வரும்போது இங்க இருந்தாகணும்; அப்படி இல்லேன்னா அந்தக் குடும்பத்துக்கு வரும் நிவாரண உதவித் தொகை கிடைக்காம போயிடும்”.

எங்க மக்கள் வெளியில எங்க வேலைக்குப் போனாலும் சாயங்காலம் ஏழு மணிக்கெல்லாம் முகாமுக்கு வந்திரணும். வெளியில வேலைக்குப்போன எங்க பெண் மக்களை ரொம்ப கேவலமா பேசுறாங்க. அகதியான்னு கேட்டுட்டு வேலை இல்லைன்னு சொல்றாங்க; தமிழ் நாட்டுல வந்து வேலை செய்யுற வடமாநில ஆளுங்களுக்கு கொடுக்குற மரியாதைகூட தமிழ் நாட்டுல தமிழ் பேசுற எங்களுக்கு இல்ல; வட மாநில ஆளுங்களுக்கு இருக்குற சுதந்திரம்கூட எங்களுக்கு இல்லை. சாமான் வாங்கப் போனா எங்களைப் பாத்ததுமே வெலைய கூட்டிச் சொல்றாங்க; அஞ்சு ரூபாய்க்கு விக்குற சாதாரண மெழுகுவத்தியவே எங்களுக்குப் பத்து ரூபாய்க்கு விக்குறாங்க; எங்க பசங்க எல்லாருமே நல்லா படிச்சிருக்காங்க. ரேசன் அட்டை, ஆதார் அட்டை இல்லாததனால பசங்க நல்ல வேலைக்குப் போக முடியல.”

”அம்மா” எப்படியாவது எங்களுக்குக் குடியுரிமை தருவார்கள் என்ற நம்பிக்கையில் இதுவரையில் நாங்கள் இருந்தோம்; இப்போது அந்த நம்பிக்கையும் போச்சு; அம்மா இறப்பு தமிழ்நாட்டு மக்களைவிட எங்களுக்குத்தான் பெரும் இழப்பு; இந்த ஆண்டு இறுதிக்குள்ளாவே எங்களுக்கு குடியுரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைல இருந்தோம். இப்ப அந்த நம்பிக்கையும் போச்சு; இலங்கையில் முள் கம்பி வாழ்க்கையைவிட கொடுமையாக இருக்கிறதுமுகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களின் நிலை; தொண்டு நிறுவனங்கள் தரும் உதவிகள்கூட அதிகாரிகளிடம் போய்விட்ட பிறகுதான் இவர்களை வந்து சேரும். இவர்களோடு சில மணி நேரங்கள் பேசிய பிறகு கண்ணீரோடு விடைபெற்றேன்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள்நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டுமென்ற முடிவை 2011இல் எடுத்தார்; அது இன்றளவிலும் இந்த மக்களுக்குப் போய் சேர்கிறது; அதே சமயம் அரசின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களின் கரிசனமான பார்வை பட்டு ஆறு ஆண்டுகளாகியும் அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரம் பெற்றவர்களின் சிந்தனையில் இந்த மக்களைப் பற்றிய பார்வை மாறவில்லை; கும்மிடிப்பூண்டி முகாமின் நிலைமை இதைத்தான் சொல்கிறது.

இதையும் படியுங்கள்: வர்தாவின் சீற்றத்தை எதிர்கொண்ட பழவேற்காடு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்