காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

கடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் (மார்ச்.29) அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

ஆனால், உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மேலும், இந்தத் தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாதம் கால அவகாசம் கோரியும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரியும் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.

இதனிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்பைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அதேபோன்று, புதுச்சேரி அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த அனைத்து மனுகக்ளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஏப்.9) விசாரணைக்கு வந்தது. இதில், மத்திய அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும், தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தேவும் தங்களது வாதங்களை முன் வைத்தனர். இதனைத்தொடர்ந்து, வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு குறித்து கடைசி நேரத்தில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், வழக்கின் விசாரணையை மே-3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், கர்நாடக மாநில தேர்தலைக் காரணம் காட்டக்கூடாது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தாலும் போராட்டம் தொடரும் என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்