வருவாயில் மத்திய அரசுக்கு பங்கு; இந்திய தொலைத்தொடர்பு சேவை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்துகிறது – வோடஃபோன் முன்னாள் சிஇஒ

0
613

புதிய தொ‌லைத் தொ‌டர்பு கொள்கையின்படி, வருவாயில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு தொ‌லைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இந்த புதிய கொள்கை வரைவுக்கு வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், வருவாயின் ஒரு பகுதி‌யை மத்திய அரசுக்கு செலுத்தாமல் இழுத்தடித்து வந்தன.

அண்மையில், ஏர்டெல், வோடபோன்  நிறுவன‍ங்களிடம், ரூ133000  கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த அமர்வு, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள், மத்திய அரசுக்கு 92,641 கோடி ரூபாய் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாக வோடபோன் முன்னாள் அதிகாரி மார்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் உள்கட்டமைப்புக்காகச் செலவு செய்யும் தொகையில் கிடைக்கும் வருமானத்தை தங்களது சரி செய்யப்பட்ட மொத்த வருமானத்தில் காட்டுவது வழக்கம் இல்லாமல் இருந்தது.   ஆனால் மத்திய தொலை தொடர்புத்துறை அதையும் சேர்த்துக் கணக்கிட்டும் மொத்த வருமானமாகக் காட்டி அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனக் கூறி இருந்தது.

ஆனால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்புக்காகச் செலவு செய்த தொகையின் வருமானத்தை தங்கள் மொத்த வருமானத்தோடு சேர்க்கக் கூடாது என வழக்கு  தொடர்ந்தன.   இந்த வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த வருமானமும் சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அதற்கான கட்டணங்களை அபராதத்துடன் மத்திய தொலைத் தொடர்புத் துறைக்குச் செலுத்த வேண்டும் எனக்  கூறப்பட்டது.

இது குறித்து வோடபோன் நிறுவன முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மார்டன் பீட்டர்ஸ், “ஏற்கனவே இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.  இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உரிமத் தொகையும் அதிகரித்துள்ளது. எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு சேவை மிகவும் அச்சம் அளித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here