புது தில்லி: ஆண்டுக்கு ரூ.2.4 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகிறது.
அதே சமயம், பல்வேறு சலுகைகள் வழங்கி, குடிமக்கள் செலுத்த வேண்டிய வரியில் இருந்து சில தள்ளுபடிகளையும் வருமான வரித்துறை வழங்கி வருகிறது.

பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவக் காப்பீடு, முதலீடுகளுக்கு வரி விலக்குகள் வழங்கப்படுகின்றன. வீட்டுக் கடன் முதல் நன்கொடை வரை பல்வேறு வரிச் சலுகைகளை நாம் பெறலாம்.

இந்த வரி விலக்குகள் அனைத்தும், ஒரு நபர் தனது வருவாயில் பெரும் பகுதியை வரியாக செலுத்தாமல், வருவாயை முதலீடாகவோ, சேமிப்பாகவோ அல்லது வீடு போன்றவற்றில் முதலீடு செய்யவோ வழி காணும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம்.

வரி விலக்கு யு/எஸ் 80 (சி)

வருமான வரிச் சட்டம் 1961ன் 80(சி) பிரிவின் கீழ், பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்தி ஒருவர் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரியை சேமிக்கலாம். பிபிஎஃப் போன்ற முதலீடுகள், நிரந்தர வைப்புத் திட்டங்கள், பங்குச் சந்தை, இஎல்எஸ்எஸ், எஸ்சிஎஸ்எஸ் போன்ற முதலீடு அல்லது சேமிப்புகள் மூலம் ஒரு நபர் ரூ.1.5 லட்சம் அளவுக்கு வரி விலக்குப் பெறலாம். மேலும், காப்பீடு, யுஎல்ஐபி, ஆயுள் காப்பீடு போன்றவற்றுக்கும் வரிச் சலுகை உள்ளது.
அதோடு, கல்விக் கட்டணம், வீட்டுக் கடனுக்கான முதல் தொகை, வீடு வாங்கும் போது கட்டும் ஸ்டாம்ப் டியூட்டி, பதிவுக் கட்டணம், இதரக் கட்டணங்களுக்கும் வரி விலக்குப் பெறலாம்.
குறிப்பிட்ட அந்த நிதியாண்டில் நீங்கள் செலுத்திய முதலீடு போன்றவற்றுக்கு மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.

வரி விலக்கு யு/எஸ் 80 (டி)

காப்பீடுகளுக்கான தவணைத் தொகை செலுத்தியதற்கான சலுகைகளை இந்த பிரிவின் கீழ் பெறலாம். இதன் கீழ் ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை பெற முடியும். உங்கள் வயது 60க்குள் இருந்தால். அதே சமயம், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக இருந்தால் ரூ.30 ஆயிரம் வரை 2018-19ம் நிதியாண்டில் வரி விலக்குப் பெற முடியும்.
உடல் பரிசோதனைக்கு செலுத்திய கட்டணத்தின் மூலம் ரூ.5000 வரை வரி விலக்குப்  பெறலாம்.
தனி நபர் ஒருவர், தனக்கும், மனைவி மற்றும் பிள்ளைகளுக்குமான காப்பீடுகளுக்கு செலுத்திய தவணைகளுக்கும் வரி விலக்குப் பெறலாம். இதில் பெற்றோருக்கு செலுத்தப்பட்ட காப்பீடுத் தவணைகளும் அடங்கும். இந்த வகையில், ஒரு நபர் தனது குடும்பத்துக்கு ரூ.30 ஆயிரமும், மூத்த குடிமக்களுக்கான ரூ.30 ஆயிரமும் என ஒரு நிதியாண்டில் ரூ.60 ஆயிரம் வரை வரிச் சலுகைப் பெறலாம்.
இதுவே, நீங்களும் மூத்த குடிமக்களாக இருந்து, உங்களது பெற்றோரும் மூத்த குடிமக்களாக இருக்கும் நிலையில், தனித்தனியே ரூ.50 ஆயிரம் என அதிகபட்சம் ஒரு லட்சம் வரை வரிவிலக்குப் பெற முடியும்.

வரி விலக்கு யு/எஸ் 24 (பி)இந்த பிரிவின் கீழ், ஒருவர் வீட்டுக் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கும் அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்குப் பெறலாம்.

வரி விலக்கு யு/எஸ் 80 (ஜி)இந்த பிரிவின் கீழ் அறக்கட்டளை அல்லது சமூக அமைப்புகளுக்கு நீங்கள் செலுத்தும் நன்கொடைக்கும் வரி விலக்கு கிடைக்கும். அதுவும் நீங்கள் நன்கொடை கொடுக்கும் அமைப்பு பதிவு செய்யப்பட்டதாக இருந்தால் மட்டுமே. நிவாரண நிதி போன்றவற்றுக்கும் வரி விலக்கு உண்டு. அது 50% முதல் 100% வரை வரை செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை உண்டு. 

வரி விலக்கு யு/எஸ் 80 (இ)அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து பெறும் கல்விக் கடனுக்கும் வரி விலக்கு உள்ளது. அதன்படி, கல்விக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வரிச் சலுகைப் பெறலாம். இதற்கு எந்த உச்சபட்ச தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை.

வரி விலக்கு யு/எஸ் 80 (1பி)பொதுவாக முதலீடுகளுக்கு வரிச் சலுகை யு/எஸ் 80 (சி)ன் கீழ் வரி விலக்கு பெற்றாலும், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செய்யும் முதலீட்டுக்கும் ரூ.50 ஆயிரம் வரை வரி விலக்குப் பெறலாம்.
இந்த ஓய்வூதியத் திட்டத்தின் முதிர்வு காலம் முடிந்து பணத்தைப் பெறும் போதும் குறிப்பிட்ட வரி விலக்குடன் பணத்தைப்பெறலாம்.

இதையெல்லாம் தாண்டி மேலும் சில வழிகளில் நாம் வரி விலக்குப் பெறலாம். அதாவது, குறிப்பிட்ட சில மாற்றுத்திறனாளிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது, மூத்த குடிமக்கள் வங்கிகளில் செலுத்தும் முதலீட்டுக்கான வட்டித் தொகைக்கு என பல்வேறு வகைகளில் வரி விலக்குகளைப் பெறலாம்.

Courtesy : Dinamani