கறைபடிந்த ராஜபக்‌சேவின் கரங்களை அங்கு சென்று முகர்ந்தாரே மோடி? அதே ராஜபக்‌சேவையும் அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு வந்தபோது அகமகிழ்ந்து வரவேற்றாரே? வரலாறு தெரியாத தமிழிசை வாய் திறக்கக்கூடாது என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

2009 முள்ளிவாய்க்கால் போரில் இலங்கைக்கு இந்தியா உதவியது என்ற தகவலை ராஜபக்‌சே கடந்த வாரம் சென்னை வந்தபோது பேட்டி அளித்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது குறித்து திமுக காங்கிரஸை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது. தமிழிசையும் இதை ஆதரித்துப் பேசி போராட்டத்தை வரவேற்றுள்ளார்.

தமிழிசை வரலாறு அறிந்து பேச வேண்டும் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

”தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்று அறியாமல் தன்னை ஒரு தலைவராக கருதிக்கொண்டு அரசியல் பேசி வருகின்றார். வரலாறும் தெரிவதில்லை, வார்த்தையை விடுவதற்கு முன் அதற்கான தரவுகளை ஆராய்வதும் இல்லை. தனது இருப்பைக் காட்டிக் கொள்ள வெறுப்பை உமிழ்ந்து முகத்தில் கரியைப் பூசிக் கொள்வதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கின்றார்.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி உதவியதாகவும் அதற்கு திமுக துணை போனதாகவும் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது தலைவர் கருணாநிதி எப்படி வேதனைப்பட்டார் என்பதை அவருடன் இருந்தவர்களும் தலைவர் கருணாநிதியை நன்கு அறிந்தவர்களுக்கும் தெரியும்.

ஈழம் என்ற சொல்லோ, அதன் வரலாறோ 2009-ம் ஆண்டில் இருந்து தொடங்கியதில்லை. தமிழிசை… நீங்கள் பிறப்பதற்கு முன்பே தலைவர் கருணாநிதி ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். திமுக தொடங்கப்பட்ட காலகட்டத்தில், அறிஞர் அண்ணா பொதுச்செயலாளராக தலைமை தாங்கி சிதம்பரத்தில் நடந்த பொதுக்குழுவில் ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண, நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி.

அதன்பின்னர், தூத்துக்குடியில் நடந்த பொதுக்குழுவில், ஈழத்தமிழர் பிரச்சினையை ஐநா மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தவரும் தலைவர் கருணாநிதிதான். இதனை எல்லாம் இதற்கு முன் நீங்கள் வாசித்திருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்காது. அதுதான் உங்களின் ஈழப்பாசம். தேவைப்பட்டால் தங்களின் தகப்பனார் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனைத் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

தமிழக வரலாற்றையும், கருணாநிதி இலங்கைத் தமிழர்கள் மீது கொண்டிருந்த அக்கறையையும் அவர் நன்கு அறிவார். அதன் பின்னர் ஈழத்தமிழர்களுக்காக அவர் நடத்திய போராட்டங்கள், எழுதிய கடிதங்கள், அறிக்கைகள் எண்ணிலடங்காது. 1983-1984 காலகட்டத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் தலைவர் கருணாநிதியும், பொதுச்செயலாளர் அன்பழகனும் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர் என்பதாவது தமிழிசை அறிவாரா? என்றால் அதற்கும் வாய்ப்பில்லை.

எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒயர்லஸ் ரேடியோவை (வாக்கி டாக்கி) உளவுத்துறை உயர் அதிகாரி மோகன்தாஸை விட்டுப் பிடுங்கி வைத்ததும், பிரபாகரனின் சகாக்களில் ஒருவரான கிட்டுவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததும் அதிமுக அரசு தானே. ஈழத் தமிழருக்காக அந்தக் காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் அரசைக் கண்டித்து பல போராட்டங்களில் செய்து கைதானது திமுக தலைவரும் திமுகவினரும்தான்.

1989-ம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியதின் விளைவாக, தலைவர் கருணாநிதியை, ராஜீவ் காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் பாலசிங்கம் போன்றவர்களை அழைத்து துறைமுகம் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தியதை அறிந்தவரா இந்த தமிழிசை சவுந்தரராஜன்? அல்லது 1991-ம் ஆண்டில் இந்த ஆட்சி விடுதலைப்பு லிகளுக்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.போராளிகளை தமிழகத்தில் ஊடுருவ செய்துவிட்டது. இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசியது தெரியுமா? பிரபாகரனை கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும் என்றவருக்கு ஈழத்தாய் பட்டம் கொடுத்த மண் தானே இது. இவற்றை எல்லாம் வரலாறு மறக்கலாம். என்போன்ற ஈழ ஆர்வலர்கள் அக்கறை கொண்டவர்கள் மறந்து விட மாட்டோம்.

2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போருக்கு பின்னரும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், எஞ்சியிருக்கும் தமிழர்கள் நலனுக்காக சென்னையில் ஆகஸ்ட் 12-ம் தேதியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் – ஈழ ஆர்வலர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் – தேசியத் தலைவர்களை அழைத்து காலையில் கருத்தரங்கும் – மாலையில் டெசோ மாநாடும் நடத்தி தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் தலைவர் கருணாநிதி.

அன்றைய காலகட்டத்தில் ஈழம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்தத் தடை உத்தரவு போடப்பட்டது. அந்தத் தடை உத்தரவை நீதிமன்றம் சென்று உடைத்ததின் விளைவாக தானே இன்றும் ஈழம் என்ற சொல்லை இவர்களால் பயன்படுத்த முடிகின்றது.

சென்னையில் 12-8-2012 அன்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* ராஜபக்சே நடத்திய கொடூர இன அழிப்பை ஐ.நா. அவையின் மனித உரிமைக்குழுவின் சார்பில் சர்வதேச நம்பகமான, சுதந்திரமான விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பும் போர்க்குற்றங்களும் கண்டறியப்பட்டு, போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய அரசே இதனைச் செய்ய வேண்டும்

* ஈழப் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கை அரசின் இத்தகைய கொடுஞ்செயல்களை உலக நாடுகளின் பிரதிநிதியாக விளங்கும் ஐ.நா. மன்றம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.என்பது உள்பட பல்வேறு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழிசை… உங்களுக்குத் தேவைப்பட்டால் கலைஞரும் ஈழத் தமிழரும் என்ற வரலாற்று ஆவணத்தை அனுப்பி வைக்கின்றேன். மேற்காணும் தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைதானார்.

மத்திய அரசில் இருந்த போதும் அங்கம் வகிக்காத போதும் ஈழத்தமிழர் நலனுக்காக திமுக போராடத் தயங்கியதில்லை என்பதைச் சொல்லிக்கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்குக் கூட சொல்லாமல் அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்களும், மத்திய அரசும் போர் நிறுத்தப்பட்டது, இனி அத்தகைய நிலை தொடராது என்று உறுதி அளித்த பின்னர் மதிய வேளையில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் 2010-11 காலகட்டத்தில் திமுகவின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இந்திய நாடாளுமன்றத்தின் போராட்டம் செய்தார்கள். இதனை தமிழிசை சவுந்தரராஜன் பாஜக வட்டாரங்களில் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

டெசோ தீர்மானங்களையும், திமுகவின் பொதுக்குழு தீர்மானங்களையும் ஐ.நா மன்றம் அதன் ஆண்டறிக்கையில் வெளியிட்டது. எந்த ஒரு இயக்கத்திற்கும் ஐநா இத்தகைய முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரியவில்லை. அந்த அறிக்கைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

கறைபடிந்த ராஜபக்சேவின் கரங்களை அங்கு சென்று முகர்ந்தாரே மோடி? அதே ராஜபக்சேவையும் அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு வந்தபோது அகமகிழ்ந்து வரவேற்றாரே? அதைப்பற்றி ஈழத்தமிழர் நலன் மீது அக்கறை கொண்ட தமிழிசை வாய் மலர்ந்ததுண்டா?

வழிநெடுகிலும் வரலாறுகள் குவிந்துள்ளன. முள்ளி வாய்க்கால் தடயங்களைப் போலவே எங்களின் மனதில் ஆறாக கவலைகள் உண்டென்றால் அது ஈழத்தமிழர்கள் குறித்த கவலை தான். இனியாவது தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும்.”

இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here