Courtesy: hindutamil

‘இந்தியாவைப் பல்வேறு மன்னர்கள் ஆட்சிசெய்துள்ளனர். ஆனால், இந்திய வரலாற்றாளர்கள் முகலாயர்கள் குறித்து மட்டுமே அதிக நூல்களை எழுதியுள்ளனர். மெளரியர், சோழர், பாண்டியர், பல்லவ மன்னர்களைப் பற்றி அதிகம் எழுதாதது ஏன்?’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஜூன் 10-ல் புத்தக வெளியிட்டு விழாவில் திடீர் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு வேறு எவரும் காரணம் அல்ல. நாமேதான் காரணம். அமித் ஷா குறிப்பிடும் முகலாயர்கள் வரலாற்றுக்கும் இதர மன்னர்களின் வரலாற்றுக்கும் பெரிய அளவு வித்தியாசம் உள்ளது. இதற்கு அவர்களது காலகட்டமும், நமது மன்னர்களின் பழக்கவழக்கங்களும் முக்கியக் காரணம்.

இந்தியா மீது படையெடுத்து வந்த முகலாயர் உள்ளிட்ட முஸ்லிம் மன்னர்களுடன் அன்றாடக் குறிப்பு எழுதுபவர்களும் வந்தனர். இவர்கள் பாபர், அக்பர், ஔரங்கசீப், ஷாஜஹான் என மன்னர்களின் போர், விழாக்கள், பொழுதுபோக்கு, அரண்மனை என அனைத்தையும் பாரசீக மொழியில் பதிவுசெய்துள்ளனர்.

ஷாஜஹானின் தாஜ்மகால் மீது எழுப்பப்படும் புகார்களுக்கு அதைக் கட்டியபோது பாரசீகப் பயணியான அப்துல் ஹமீது லாகூரி எழுதிய ‘பாட்ஷாநாமா’ இன்று பதிலளிக்கிறது. பேரரசரான அக்பரின் அன்றாட நிகழ்வுகள் குறித்து இரண்டு நாட்குறிப்புகள் உள்ளன.

ஒன்றில், அக்பரின் அனைத்து நடவடிக்கைகளும் பதிவாகியிருக்கும். மற்றொன்றில், அக்பர் படித்துச் சரிபார்த்துத் தேவையானவற்றை மட்டும் பதிவுசெய்து எழுதப்பட்டிருக்கும். இந்த இரண்டு நாட்குறிப்புகளுமே ‘அயினி அக்பரி’ எனும் பெயரில் இன்றும் உள்ளன.

இவற்றில், அக்பர் சரிபார்த்தது மட்டும் இந்தியாவில் இருக்க, முதலில் பதிவான குறிப்புகள் லண்டனின் எச்.சி.ஐ.யில் உள்ள ‘இந்தியா ஹவுஸ்’ நூலகத்தில் உள்ளன.

இதர மன்னர்களின் பல வரலாற்று ஆவணங்களும்கூட இந்தியாவுக்கு வெளியே உள்ளன. இதில் முக்கியமான ராஜராஜனின் சாசனங்கள் எனும் செப்பேடுகள், நெதர்லாந்திலுள்ள லேடன் அருங்காட்சியகத்தில் சிக்கியுள்ளது.

இவை போன்ற ஆதாரங்கள் மட்டுமன்றி, அவ்வப்போது ஐரோப்பிய அறிஞர்கள் தரவுகளாகக் கொண்டுசென்ற ஓலைச்சுவடிகளுடன், பல முக்கிய நூல்களும் வெளிநாடுகளில் உள்ளன.

தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு ஆகியவற்றில் ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்தவையும் திரளாக வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

இவற்றின் எண்ணிக்கையும் விவரமும் நம்மிடம் இல்லை. மத்திய அரசு நினைத்தால் இந்தியாவை நான்கு பகுதிகளாகப் பிரித்து, அங்குள்ள வரலாற்றாளர்களைத் தேர்வுசெய்து குழுக்கள் அமைக்கலாம். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, நம் வரலாற்று ஆதாரங்களைத் தொகுப்பதுடன், மீட்கவும் முயலலாம். இவை அனைத்தும் கிடைத்தால்தான் நம் வரலாற்றை விரிவாக எழுத முடியும்.

முகலாயர்களுடையதுபோல், நம்மிடம் ஆதாரங்களாக இருப்பவை மன்னர்கள் வடித்த கல்வெட்டுக்களே. பெரும்பாலான தென்னிந்திய மன்னர்கள் கல்வெட்டுகளையும், செப்புப் பட்டயங்களையுமே ஆதாரமாக்கிக் கொண்டனர். இக்கல்வெட்டுகள் பிராகிருதம், சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபு, பாலி, இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் உள்ளன.

மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் (ஏஎஸ்ஐ) கல்வெட்டியல் பிரிவு, கிடைத்தவற்றில் பெரும்பாலானவற்றைப் பதிப்பித்துவிட்டது, நூறாண்டுகளுக்கு முன் படி எடுத்தும் முழுமையாகப் பதிக்கப்படாமல் மைசூரில் உள்ளவை தமிழ்க் கல்வெட்டுகள் மட்டுமே.

இப்பிரச்சினை குறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.சாந்தினிபீ ‘விகடன்’, ‘இந்து தமிழ்’ பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். இதையடுத்து, மைசூர் அலுவலகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தமிழகத்துக்குத் தமிழ்க் கல்வெட்டுகளின் படி நகல்கள் வந்துள்ளன.

மிக அதிகமான இலக்கியச் சான்றுகளைக் கொண்டது சங்க காலம். தற்போது அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடியிலும் கொந்தகையிலும் கிடைப்பவை இந்தச் சான்றுகளை நிரூபணமாக்கிவருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

இதன் பிறகும் அகழாய்வு செய்ய வேண்டிய இடங்களில் அதற்கான அனுமதியை அளிக்க ஏஎஸ்ஐ முன்வரவில்லை. எனினும், இதன் மீதான விழிப்புணர்வு தமிழர்களிடையே இருப்பதை உணர்ந்தது தமிழக அரசு. தானே முன்வந்து நடத்தும் அகழாய்வின் நான்காவது அறிக்கையும் வெளியானது.

ஆதிச்சநல்லூரில் இரண்டாவது முறை அகழாய்வு 2004-ல் நடத்தியும் அதன் அறிக்கையை ஏஎஸ்ஐ இன்னும் வெளியிடாமல் உள்ளது. கீழடியின் பானை ஓடு எழுத்துகள், பொ.ஆ,மு. (கி.மு.) ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே எழுதப்பட்டவை என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டன.

இதன்படி, நம் முதல் எழுத்துகள் எனக் கருதப்படும் அசோகர் காலத்துக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னதாகவே தமிழர்களுக்கு எழுதத் தெரியும் என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, பெருமைகொள்ள வேண்டும். இது குறித்து மத்திய அரசு காக்கும் அமைதி, தென்னிந்தியா முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்பதை வெளிப்படுத்துவதுபோல் தோன்றுகிறது.

இதுபோன்ற கல்வெட்டு ஆதாரங்கள் வடஇந்தியாவிலும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பதிப்பிக்கப்பட்டு மெளரியர்கள், குப்தர், ஹர்ஷர் என விரிவாக வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. மெளரியர்களின் முக்கிய வரலாற்று ஆதாரமான ‘அர்த்தசாஸ்திரம்’ தஞ்சாவூரின் சரஸ்வதி மஹால் நூலகத்தில்தான் கண்டெடுக்கப்பட்டது.

மத்திய அரசின் பாடத்திட்டம், வடஇந்தியர்கள் எழுதியிருக்கும் வரலாற்று நூல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிகமாக இடம் ஒதுக்கப்பட்டிருப்பது வடஇந்தியர்களுக்கே. 1857 மீரட்டின் சிப்பாய்க் கலகம். சாவர்க்கர் தனது நூலில் குறிப்பிட்டார் என்பதற்காகவே முதல் சுதந்திரப் போராகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், 1806 வேலூர் புரட்சி, 1808 திருவாங்கூர் கலவரம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நடந்தவற்றை மத்திய அரசு கவனத்தில் கொள்ளாமல் உள்ளது.

இதுபோன்றவைதான் ஐரோப்பியர்கள் தம் வரலாற்றை எழுதி முடித்தமைக்கும், நாம் இன்னும் எழுதாமல் இருப்பதற்கும் காரணம். அரசியல், மதம், சமூகம், மொழி, பிரதேசம் போன்றவை தொடர்பான எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இன்றி எழுதப்படுவதுதான் ஒரு நாட்டின் வரலாறு என்பது அமைச்சர் அமித் ஷா அறியாததா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here