வரலாம், வா

எல்லா சக தேசத்தவரின் நேசக்கரங்களும் நம்மைப் பலப்படுத்தும்.

0
1305
சென்னைவாழ் தமிழ்ப் பெண்கள்

இந்தியா என்பது பல தேசங்களின் கூட்டமைப்பு; இந்தப் பல தேசங்களும்தான் இந்தியா என்ற நாட்டைச் செழுமைப்படுத்தி வருகின்றன. தமிழ்த் தேசமும் தனது தொன்மையான பண்பாடு மூலமாக இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு அரசியல் தலைமைகளின் உதவியுடன் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பறித்து வருகிறது நடுவணரசு. உலகமயச் சூழலில் கந்துவட்டி முதலீட்டியத்துக்கு அடிமையான தேசிய அரசியல் தலைமைகள்தான் இந்தப் பாகுபாடான, சுரண்டல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. மக்களிடமிருந்து அன்னியப்பட்ட, மக்களிடமே பேசாத ஒரு புதிய ஆளுகை முறையைத் திணிப்பதற்கு இப்போதைய நடுவணரசு முயற்சிக்கிறது. இதன் வழியாக அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் திரள்களைக் காண்கிறோம். இதனால் தமிழ்த் தேசத்துக்குள்ளும் கடும் வேலையிழப்புகள், பசி, பட்டினி முதலான துயரங்கள் பெருமளவுக்கு நிகழ்ந்து வருகின்றன. மோடி அரசின் செல்லா நோட்டு நடவடிக்கையும் ஒற்றை சரக்கு சேவை வரி விதிப்பும் இந்த இன்னல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. மத்திய அரசின் அதிகாரக் குவிப்பும் தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுதலும் மக்களின் அறச் சீற்றத்தை அதிகரித்து வருகின்றன.

தமிழ் மக்கள் மத்தியில் மேலெழுந்து வருகிற கோபத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டுக்குப் பிழைப்புக்காக வந்துள்ள வேற்று மாநிலத்தவர் மீதான வெறுப்பு அல்லது அவர்களை ஒதுக்கி வைத்தல் சில பகுதிகளில் நிகழ்ந்து வருகிறது. இந்த வெறுப்போ ஒதுக்கி வைத்தலோ தமிழ்த் தேசத்தின் விழுமியங்களுக்கு எதிரானது. “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”, “திரைகடலோடியும் திரவியம் தேடு” போன்ற பழம்பெரும் சொற்றொடர்களுக்கு முரணான செயல்பாடு இது. இன்றைக்கு ஜெர்மனி 10 லட்சம் சிரியர்களைத் தனது தேசத்துக்குள் இணைத்துக்கொண்டு தனது மனித வளத்தை மேம்படுத்தியுள்ளது. கனடா நான்கு ஆண்டுகளில் அயல் தேசங்களைத் தன் தேசமாக விரும்பி ஏற்றுக்கொள்கிறது. ஆஸ்திரேலியாவும் அப்படித்தான். ஐந்து ஆண்டுகளில் அயல் தேசத்தாரை தன்னவராக்கிக் கொள்கிறது அமெரிக்கா. தமிழ்த் தேசத்தின் பண்பாட்டு, பொருளாதார மேம்பாடு அகண்ட பார்வையால்தான் செழுமையுறும்; மேலும் மேலும் சுருங்குகிற எந்தத் தேசமும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. தன்னாட்சித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் எல்லா சக தேசத்தவரின் நேசக்கரங்களும் நமக்குத் தேவை.

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்