வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இதுவரை 10 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பொதுமுடக்கத்தால் பலரும் தங்களது தொழிலைத் தொடர முடியாததால் பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. இதனால் ஏற்பட்ட வேலையின்மையால் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊரை நோக்கி பயணப்பட்டனர். அதே வேளையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர வந்தே பாரத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.” என உறுதி அளித்துள்ளார்.

தற்போது இந்த திட்டத்தின் 5 ஆம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here