வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்

ஆர்.கே.நகரில் ஒரு நாள்

0
491
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் டிடிவி தினகரன் ஆட்கள் 89 கோடி ரூபாய் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலுள்ள சந்திரசேகர் நகரிலிருந்து புறப்படும்போது ஒரு பாட்டி அழுதுகொண்டே ஓடி வந்தார்; “அய்யா, எனக்கு வர வேண்டிய பணம் வந்து சேரவில்லை; பணத்தைத் தலைவர் அமுக்கிட்டார்” என்றார். பக்கத்திலிருந்த பெரியவர் ஒருவர், “அம்மா, இவிங்க மீடியா; இவிங்ககிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது” என்று சொல்லி சமாதானப்படுத்தினார். இன்னொரு கிழவி சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார்: ”கஷ்டப்பட்டு உழைக்கிற காசே கையில நிக்க மாட்டேங்குது; ஓட்டுக்கு வாங்குற பைசா நிக்கவா போகுது? எதுக்குக் காசு வாங்கணும்?” அப்படியே நடந்து தொப்பை விநாயகர் கோவில் தெரு முனைக்கு வந்தால் ஒருவர் ஸ்கூட்டரில் வேகமாக வந்து அருகில் நிறுத்தினார். “சார், நீங்க மீடியாவா?” ஆமாம் என்றதும் “இங்க எழில் நகர்ல காலைலேர்ந்து தி.மு.ககாரங்க ஓட்டுக்கு 3000 ரூபா தர்றாங்க; நீங்க போனா நேரிலே பார்க்கலாம்.” அ.இ.அ.தி.மு.க அம்மா பிரிவின் வேட்பாளர் டி.டி.வி. தினகரனின் ஆட்கள் ஓட்டுக்கு 4,000 கொடுத்ததுக்குப் பதிலடி நடவடிக்கை என்று அந்த மனிதர் சொன்னார். கையோடு பறக்கும் படைக்கும் தகவல் சொல்லிவிட்டார்.

இதையும் பாருங்கள்: ஆட்சி

இதையும் பாருங்கள்: என்.டி.ஆர்

சில நிமிடங்களில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் காவல் நிலையத்தில் பறக்கும் படையினர் 26,000 ரூபாயுடன் ஒரு தி.மு.ககாரரை ஒப்படைத்தார்கள். மற்றவர்கள் ஓடிவிட்டதாக தகவல்; இப்படிக் காசு வினியோகம் செய்த கட்சிக்காரர்கள் ஓடிப்போனதையும் இந்தியத் தேர்தல் ஆணையம் டாக்டர் ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்ததற்கான விளக்கமான அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அப்படியே பக்கத்திலுள்ள டிரைவர்ஸ் காலனிக்கு வந்தால் கடந்த 20 வருடங்களாக சுயேச்சையாகப் போட்டியிடும் மாரிமுத்து அடிபம்பில் நீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்களிடம் நோட்டீஸ் கொடுத்து ஓட்டு கேட்டுக்கொண்டிருந்தார். ”2014இல் எம்.பி எலெக்ஷன்ல 600க்கும் மேலான ஓட்டுகள் வாங்கினேன்; அதிலிருந்து பல கட்சிக்காரர்கள் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; சுயேச்சையாக இருப்பதே என்னைப் போன்ற ஏழைகளுக்குச் சுயமரியாதை” என்று இப்போது டாட் காமிடம் சொன்னார் மாரிமுத்து. டிரைவர்ஸ் காலனியில் வங்கிக் கிளை அமைப்பதுதான் முக்கியமான நோக்கம் என்று சொல்கிறார் இவர். சென்னைப் பெருநகரத்தைக் கட்டியெழுப்புவதில் சம பங்கு வகித்த வட சென்னை மக்களுக்குப் போதுமான கல்வி சாலைகளை, வங்கிகளைத் திறக்கக்கூட மனமில்லாமல் போன ஆட்சியாளர்களைப் பற்றி அவருடன் இருந்த ஒரு சில தொண்டர்களும் கவலையோடு பேசினார்கள்.

இதையும் பாருங்கள்: நந்தினி

இதையும் பாருங்கள்: ஃபாரூக்

வாக்காளர்களுக்குப் பணம் தருவதில் தி.மு.கவுக்குத் திருமங்கலம்போல அ.தி.மு.கவுக்கு ஆர்.கே.நகர் அமைந்துவிட்டது; 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களை வெளியிட்டு இந்திய வரலாற்றில் முதல் முறையாக தேர்தலை நிறுத்தி வைத்தது தேர்தல் ஆணையம். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தாகும்” என்று சொன்னதுமே தி.மு.க தரப்பிலிருந்து இப்போது டாட் காமிடம் பேசிய ராமச்சந்திரன் “அவ்வளவுதான்; இனி வேலை செய்ய வேண்டியதில்லை” என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 6) இரவே சொன்னார். இருந்தாலும் டிடிவி தினகரன் மட்டும் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டுமென்பது ஓ.பன்னீர்செல்வத்தின் அணியின் கருத்தாக இருந்தது. “தேர்தலை நிறுத்துவது தீர்வாகாது; தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும்; தேர்தலை நிறுத்துவதால் பாதிக்கப்படுவது என்னைப் போன்ற வேட்பாளர்கள்தான்; தி.மு.கவும் அ.தி.மு.கவும் எப்போது தேர்தல் வைத்தாலும் செலவு செய்யும் பணபலம் படைத்தவர்கள்” என்று தே.மு.தி.கவின் வேட்பாளர் மதிவாணன் இப்போது டாட் காமிடம் சொன்னார்.

இதையும் பாருங்கள்: நெடுவாசல்

இதையும் பாருங்கள்: செல்ஃபோனால் நாம் தொலைத்தவை

இரண்டு வருடங்களுக்கு முன்பு மத்திய ரயில்வே பட்ஜெட்டைப் பற்றி திரிசூலம் ரயில் நிலையத்தில் நேரலை செய்துகொண்டிருந்தபோது ”தென் சென்னை புறநகர் ரயில்களில் மட்டும் ஏன் 12 பெட்டிகள்? வட சென்னையின் புறநகர்ப் பகுதி ரயில்களில் மட்டும் ஏன் வெறும் 9 பெட்டிகள்?” என்று என்னிடம் கேட்ட வடசென்னைப் பையனின் முகம் மனதில் அடிக்கடி வந்துபோனது. ”நீளமான நடைமேடைகள் வட சென்னையில் இல்லை” என்று நான் சொன்னதும் அந்தச் சிறுவன் “இதுவே பாரபட்சம்தானே” என்று உறுதியாகச் சொன்னான். டிரைவர்ஸ் காலனியில் மாரிமுத்துவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அடிபம்பில் நீர் நிறுத்தப்பட்டது; காலை 8.30க்கு மூடப்பட வேண்டிய குழாய் கால் மணி நேரம் முன்னதாக மூடப்பட்டது; தினசரி பங்கான ஐந்து குடங்கள் தண்ணீர் கிடைக்காத பெண்மணி ஆவேசமாக கத்தினார்; கொஞ்ச நேரமாக சண்டை; எந்த வேட்பாளர் வந்தாலும் நிறுத்த முடியாத சண்டை. ஓர் அரை மணி நேரம் வலுத்து பின்னர் ஓய்ந்தது. ”இது தினமும் காலையில் நடக்கும்; வார்த்தைகள்தான் எல்லை மீறும்; கை மீறுகிற வன்முறை நடக்காது” என்றார் மாரிமுத்து.

இதையும் படியுங்கள்: 40 வருஷ ரகசியம் உங்களுக்காக: அமெரிக்கா-சவூதி அரேபியா நட்பு பாராட்டுவது ஏன்?

இதையும் படியுங்கள்: ஆப்பிள் போனும் பிராடா கேன்டியும்: அமெரிக்கா செல்வோம், வாங்க

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் எல்லை சந்திரசேகர் நகர்; பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி இருக்கிறது; இன்னும் சற்று தொலைவில் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் இருக்கிறது; அந்த வளாகம் பெரம்பூர் தொகுதிக்குட்பட்டது. அங்குள்ள குப்பைகள் எரியும்போது உண்டாகும் தொடர் புகைமூட்டத்தால் உருவாகும் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஆகியவற்றால் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சென்னைப் பெருநகரத்தில் தினமும் உருவாகிற 5000 டன் குப்பைகளில் சுமார் 2500 டன் குப்பைகள் இந்த வளாகத்தில்தான் கொட்டப்படுகின்றன. ”இங்கு கொசுத்தொல்லை நிரந்தரமாகிவிட்டது; பக்கிங்ஹாம் கால்வாய்க்கும் எங்கள் குடியிருப்புக்குமிடையே உள்ள மதில் சுவரைச் சீக்கிரமே கட்டித்தர வேண்டும்” என்கிறார் சந்திரசேகர் நகரைச் சேர்ந்த வனிதா. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையமும் மூடப்பட்டு விட்டதால் ஏழு கிலோமீட்டரிலுள்ள ஸ்டான்லிக்குத்தான் மருத்துவம் பார்க்கச் செல்கிறார்கள். ”இந்த வளாகத்தில் வெளியாகும் நச்சுப்புகையை ஈடு செய்யும் அளவுக்கு ஆக்சிஜனைத் தரக்கூடிய மரங்களைச் சுற்றிலும் நட்டிருக்க வேண்டும்; அந்த விதிகளைக் கடைபிடிக்கவில்லை; மக்கள் வாழும் பகுதிக்கு நடுவேயுள்ள இந்த வளாகத்தை அப்புறப்படுத்த வேண்டும்” என்று சொன்னார் தே.மு.தி.க வேட்பாளர் மதிவாணன். அங்கிருந்து புறப்பட்டு நேதாஜி நகரின் சந்தை வழியாக நடந்து சென்றபோது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ”தமிழ்ப் பிள்ளைகளுடன்” நகர்வலம் வந்துகொண்டிருந்தார்; அருகிலுள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைக் கூட்டுத்தொழுகைக்கு முன்பான மதகுருவின் பிரசங்கம் நடந்துகொண்டிருந்தது; தினமும் கோவில்களிலும் வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களிலும் ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயங்களிலும் ஓட்டு கேட்பது இந்திய ஜனநாயகத்தின் அழகுகளில் ஒன்று; நாம் தமிழரின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம், அ.இ.அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மாவின் வேட்பாளர் இ.மதுசூதனன் என்று பலரும் தொழுகை முடிந்து வருபவர்களிடம் ஓட்டுக் கேட்பதற்காக பள்ளிவாசலுக்கு அருகில் காத்திருந்தார்கள்.

இதையும் படியுங்கள்: டிசிடபிள்யூவின் வேதிக்கழிவுகளால் அழியும் மக்கள்

இதையும் படியுங்கள்: சுற்றுச்சூழலைச் சூறையாடும் தாது மணல் வியாபாரம்

வ.உ.சி நகர் மார்க்கெட் களைகட்டியிருந்தது; தொப்பிகளும் மின்கம்பங்களும் ஆதிக்கம் செலுத்தின; அருகில் சி.பி.எம் அலுவலகத்தில் வேட்பாளர் ஆர்.லோகநாதன் தெளிவாகப் பேசினார். ஒரு வாக்காளர் தன்னிடம் வந்து “எங்க வீட்டில ஆறு ஓட்டு; நாலு ஓட்டுக்குத்தான் பணம் கொடுத்தானுக. இரண்டு பேருக்குப் பணம் தரல; இவனுகள என்ன பண்ணலாம் அண்ணா?” என்று கேட்டதை நினைவுபடுத்தினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலுள்ள தொழிலாளிகளுக்காக அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாலை நேரங்களில் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்று சொன்னார்; ”இந்தத் தொகுதியில் 80 சதவீத நிலம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; இப்போது அங்கு குடியிருப்பவர்களுக்கும் ஆரம்பத்தில் அந்த வீடு யாருக்கு ஒதுக்கப்பட்டதோ அவருக்கும் தொடர்பு இருக்காது; இதனைக் கருத்தில் கொண்டு வீடுகளை இப்போது வாழும் மக்களின் உடமையாக மாற்றி ஆவணப்படுத்த வேண்டும்” என்றார் இந்தச் சிவப்புத் துண்டுத் தோழர். ஓபிஎஸ் தரப்பு, தினகரன் தரப்பு, திமுக, தீபா தரப்பு என்று பலரும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததால் தங்களிடமும் மக்கள் பணத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு சி.பி,எம் தோழர் வேதனைப்பட்டார். தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் வாக்காளர் ”அய்யா, எங்க வீட்டில நாலு ஓட்டு; இரண்டு ஓட்டுக்குத்தான் பணம் வந்திருக்கு; மீதிப் பணம் எப்போ குடுப்பீங்க” என்று கேட்டிருக்கிறார். தேர்தலை நடத்தும் ஆணையம்தான் ஓட்டுக்கும் செலவு செய்கிறது என்று அந்தப் பெண்மணி நம்பியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: டைட்டானிக் கப்பலை எரித்தது தீயா? பனியா?

இதையும் படியுங்கள்: ரஜினிகாந்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மலேசிய பிரதமர்

காமராஜர் தேசிய காங்கிரசின் வேட்பாளர் எம்.எஸ்.ராஜேந்திரனின் தொண்டர்கள் நோட்டீஸ் கொடுக்கும்போது “நீங்க எப்ப காசு கொடுப்பீங்க” என்கிற கேள்வியை சிலர் கேட்டதாக சொல்கிறார்; ஓட்டுக்குப் பிற கட்சிகள் காசு கொடுக்கும்போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் “அது உங்கள் பணம்; உங்களிடமிருந்து பறித்து சேர்க்கப்பட்ட பணம்; வாங்கிக் கொள்ளுங்கள்; வாங்கிவிட்டு எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று பகிரங்கமாகவே வாக்காளர்களிடம் பேசியிருக்கிறார்கள். 2015, 2016 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா இந்தத் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பண வினியோகம் பற்றிய பெரிய புகார்கள் எழவில்லை; ஆனால் அவருக்குப் பிறகு அ.தி.மு.க யாருக்கு என்கிற போட்டியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைக் குறிவைப்பதால் “எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும்” என்கிற வெறியைத் தொகுதியில் பார்க்க முடிந்தது; சுமார் 60,000 வாக்கு பலம் கொண்ட தி.மு.கவும் அ.தி.மு.க பிளவுபட்டிருப்பதை மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கிறது; அ.தி.மு.க தரப்புக்குப் போட்டியாக தி.மு.கவும் தங்கள் வாக்காளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு பணம் வினியோகித்ததாக எழில் நகர் பகுதி வாக்காளர்கள் என்னிடம் சொன்னார்கள். கொடுக்கப்படும் பணத்தை வைத்து மக்கள் முடிவு செய்கிறார்கள் என்று நம்பப்படுவதில்லை; இதனால்தான் பணத்தைக் கொடுத்துவிட்டு சத்தியம் வாங்குவது போன்ற வழக்கங்கள் இருக்கின்றன; கருணாநிதி நகரில் ரேணுகா தேவி அம்மன் கோவிலருகில் வந்த ஓர் அம்மா “தேர்தலை ரத்து செய்தாலும் செய்து விடுவார்கள்; ஐ.டி கார்டைக் காட்டி சீக்கிரம் தொப்பிக்காரனிடம் (டிடிவி தினகரன் ஆட்கள்) காசு வாங்கிவிட வேண்டும்” என்று சொன்னார். அப்போதுதான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். “மத்திய அரசு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக செயல்படுகிறது” என்று புலம்பிக்கொண்டே அந்தப் பெண்ணைக் கண்டும் காணாமல் கடந்து சென்றார் ஒரு தொப்பிக்காரர்.

இதையும் படியுங்கள்: ரசிகர்களைச் சந்திக்காதது ஏன்?: ரஜினி சொல்லும் கதையைக் கேளுங்க

இதையும் படியுங்கள்: மக்கள் முதல்வர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்