வந்தார் மஞ்சு பார்கவி

குறையொன்றுமில்லாத நடனம்.

0
479
மஞ்சு பார்கவி. படம் நன்றி: ஸ்ரீதர் வெங்கட்

‘சங்கராபரணம்’ புகழ் மஞ்சு பார்கவியை நினைவிருக்கிறதா? 1979-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் தாசியின் மகள் துளசி கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருப்பார். சங்கர சாஸ்த்ரியாக வரும் சோமய்யா ராஜுலு மீது அவருக்குள்ள பக்தியை ரொம்ப நுணுக்கமாக கையாண்டிருப்பார் இயக்குனர் விஸ்வநாத். அந்தக் காலகட்டத்தில் நம்மூரில் ஒரு தெலுங்கு படம் அத்தனை நாட்கள் ஓடியது அதுவாகத்தான் இருக்க முடியும். அப்புறம் வந்த ‘சலங்கை ஒலி’யில் ‘பாலகனகமய’ என்ற அட்டாணா ராக கீர்த்தனைக்கு கல்யாண வீட்டு மேடையில் ஆடுவார். அதைப் பார்த்துவிட்டு கமல்ஹாசன் சமையக்கட்டில் அட்டகாசமாக கரண்டியை வைத்துக் கொண்டு ஆடியதும், தியேட்டர்கள் அதிர்ந்ததும் நேற்றைய கதை! இந்த ‘ஐ பேடு’ காலத்தில் எதற்கு இந்த பழைய சமாச்சாரங்கள் என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது.

இதையும் படியுங்கள்: மெஹபூப்களின் நாகஸ்வரம்

கிட்டத்தட்ட 38 வருடங்களுக்குப் பிறகு அதாவது சங்கராபரணத்தில் தியேட்டரில் பார்த்த மஞ்சு பார்கவியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரம்மகான சபாவில் ‘ஸ்ரீலலிதா’ என்ற நாட்டிய நிகழ்ச்சியை தருவதற்காக தனது மாணவிகளுடன் பெங்களூரிலிருந்து வந்திருந்தார். காலம் சில கிலோக்களை உடம்பில் ஏற்றி விட்டது தெரிந்தது. சற்று தளர்ந்து போயிருந்தாலும் முகத்தில் அதே லட்சணம். நடனக் கலைஞர்களுக்கேயுரிய தீட்சண்யமான கண்கள், இந்தப் பெண்மணியின் பெரிய பலம். அறுபதைக் கடந்த வயதிலும் சோர்வடையாமல் தம் பிடித்தது மட்டுமல்ல.. தனது இளம் மாணவிகளுக்கு சரிசமமாக ஆடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: செம்பொன்குடி சீனிவாச அய்யரின் கதை

ஸ்ரீலலிதாம்பிகையின் புராணத்தைதான் எடுத்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டில் கும்பகோணம் அருகே திருமெய்ச்சூர் என்ற ஊரில் லலிதாம்பிகைக்கு கோயில் இருக்கிறது. அங்குள்ள அம்பாள் சன்னதியில் ஜகஜ்ஜோதியாக காட்சி தரும் லலிதாம்பிகையை காணவே கண்கோடி வேண்டும். போக முடியாதவர்கள் போனவர்களைக் கேட்டுப் பாருங்கள். மஞ்சு பார்கவியின் நாட்டிய நிகழ்ச்சியில் அகத்திய முனிவர் லலிதா சகஸ்ர நாமத்தின் மகிமையை (1008 ஸ்லோகங்கள்) உலகுக்கு எடுத்துரைப்பதாக ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் அம்பாளின் புராணம் பாடல்களாக விரிகிறது. மஞ்சு பார்கவியோடு ஆடிய நான்கைந்து பெண்களும் மிக நல்ல தேர்வு. இந்த நாட்டிய நிகழ்ச்சியில் ஆடியவர்கள் குச்சுபிடி ஸ்டைலில் அபிநயித்தார்கள். அடவுகள், அரைமண்டி எல்லாம் கச்சிதமாக இருந்தன. இந்த வயதில் மஞ்சு பார்கவியின் பாதப்பிரயோகங்களில் துளிகூட தொய்வோ, தடுமாற்றமோ இல்லை. அதாவது ஜதிகளின் போது காலப்பிரமாணத்தை ஓரிரு இடத்தில் கூட அவர் தவறவிடவில்லை.

இதையும் படியுங்கள்: கேள்வி கேட்டா மேக் இன் இந்தியான்னு வட சுடுவான்

எல்லாம் சரி, நிகழ்ச்சியைக் காண வந்திருப்பவர்களுக்கு ஆடும் விஷயத்தை ஓரளவாவது விளக்கியிருக்க வேண்டுமா? ஆரம்பத்தில் திரைமறைவில் ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி லலிதாம்பிகை புராணத்தைக் கொஞ்சம் சொல்லிவிட்டு பிறகு தெலுங்கு வர்ணனைக்குப் போய்விட்டார்கள். அப்புறம் அத்தனை பாட்டுகளும் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம். அவ்வப்போது தமிழில் சற்று விளக்கியிருக்க வேண்டாமா? தெலுங்கை தாய் மொழியாக கொண்ட மஞ்சு பார்கவி மட்டுமல்ல… இங்கே மயிலாப்பூர், அடையாறில் வசிக்கும் நம்மூர் நடன மணிகள் கூட தங்கள் நிகழ்ச்சிகளின் போது தமிழில் விளக்குவதிலை. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸிலும் பிரம்ம கான சபாவிலும் அமர்ந்திருப்பவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்தும், லாஸ் வேகாஸில் இருந்துமா வந்திருக்கிறார்கள்? என்ன பேத்தல் இது? ஆனால் இந்த பேத்தல், ரொம்ப காலமாக சென்னையில் நடக்கும் பல நடன நிகழ்ச்சிகளில் நடக்கிறது! தமிழை இவர்கள் கீழ்த்தட்டு மக்களின் பாஷையாகவே எண்ணுகிறார்கள். திருக்கடையூரிலும், திருமெய்ச்சூரிலும் நடந்த புராணத்தை நியூயார்க்கில் அரங்கேற்றும்போது ஆங்கிலத்தில் சொன்னால் அர்த்தமுள்ளது.

இந்த நாட்டியத்தில் இன்னொரு நல்ல விஷயம், சங்கீதம். ஆரபி, இந்தோளம், சஹானா, குந்தளவராளி என வெவ்வேறு ராகங்களில் அமைந்த பாடல்களை, பாடகர்கள் இதயபூர்வமாக பாடினார்கள்-சி.டி.யில். மஞ்சு அடிக்கடி சென்னை வரவேண்டும்-தமிழோடு!

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்