5569ac65b1568

(தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த பிபிசி தமிழின் கட்டுரைத் தொடரின் இறுதிப்பாகம்.)

வட இந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை தென் இந்திய மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று 2011இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்த மொழிகள் தொடர்பான தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, வட மாநிலங்களில் இருக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இல்லாதது, தென் மாநிலங்களில் தொழில்துறைக்கு போதிய அளவு மனித வளம் இல்லாதது போன்றவையே பொதுவான காரணங்களாகக் கருதப்பட்டாலும், ஓர் ஊரில் நிலவும் அமைதியும், நேர்மறையான சமூகக் சூழல், பருவநிலை ஆகியவையும் பிற ஊரைச் சேர்ந்தவர்கள் வந்து நீண்ட காலம் தங்கத் தூண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சமூக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் இருதய ராஜன் பிபிசி தமிழிடம் பேசும்போது, “ஓர் ஊரின் சமூகத்தில் சகிப்புத்தன்மை நிலவினால், தாற்காலிகமாகத் தங்கிப் பணியாற்ற அந்த ஊருக்கு வந்தவர்கள்கூட, தாங்கள் திட்டமிட்ட காலத்தைவிடவும் நீண்ட நாட்கள் தங்கி வேலை செய்ய விரும்புவார்கள். தனியாக வந்து தங்க நினைத்தவர்களுக்கு தங்கள் குடும்பத்தினரையும் பின்னர் அழைத்து வருவார்கள்,” என்று கூறினார்.

big_thumb_201803120704571599166597_201712150734351540948975download

மக்கள் புலம் பெயர்தல் குறித்த ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவரான இருதய ராஜன் மேலும் கூறுகையில், “சிங்கப்பூரில் தமிழர்களால் இந்துக் கோயில்களைக் கட்ட முடிகிறது. கனடாவில் சீக்கியர்களால் குருத்வாராக்களை கட்ட முடிகிறது. துபாயில் சென்று பணியாற்றும் கேரளத்து கிறித்தவர்களால் அங்கு தேவாலயம் கட்ட முடிகிறது. ஒரு வேளை குடிபெயர்ந்துள்ள ஊர்களில் அதற்கான சூழல் இல்லாவிட்டால், பணிக்காக அங்கு செல்வோர் நீண்ட காலம் வாழ விரும்ப மாட்டார்கள்,” என்றார்.

‘தவறான தகவல்களையும் கொடுத்திருக்க வாய்ப்புண்டு’

இந்திய அரசு வெளியிட்டுள்ள மொழிகள் குறித்த தரவுகள் ஏழு ஆண்டுகள் பழையவை என்பதால் அதை தற்போதைக்கு முழுதும் சரியானதாகக் கருத முடியாது என்று கூறும் அவர், “வேலைவாய்ப்புகளுக்காக குடிபெயர்தல் என்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். ஓராண்டுக்கு முன்பு கேரளாவின் கொச்சி நகரில் மெட்ரோ ரயில் அமைக்க வேலை செய்துகொண்டிருந்தவர்கள், இன்று வேறு ஊரில் வேறு வேலை செய்துகொண்டிருக்கலாம். இவ்வாறு சில மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இடம் மாறிக் கொண்டிருப்பவர்கள் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை,” என்று கூறுகிறார்.

Devotees prepare ritual rice dishes to offer to the Hindu Sun God as they attend Pongal celebrations at a slum in Mumbai

“இந்தக் கணக்கெடுப்பில் கலந்துகொண்டவர்கள் தவறான தகவல்களையும் கொடுத்திருக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, மும்பையில் 1970களிலும் 1980களிலும் தமிழர்களுக்கு எதிர்ப்பு இருந்தது. இப்போது பிகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக அந்த மனநிலை உள்ளது. அந்த மாநிலங்களில் இருந்து வந்த தொழிலார்கள், முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் தம்மைப் பற்றிய உண்மையான தகவல்களைத் தெரிவிக்காமல் மறைத்திருக்கலாம். இந்தி என்று சொன்னால் சிக்கல் எழலாம் என்று கருதி, அவர்கள் மொழி மராத்தி என்று தற்காப்பு கருதி மாற்றிச் சொல்லியிருக்கலாம். எனவே இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரி என்று கருத முடியாது,” என்கிறார் இருதய ராஜன்.

‘இது மாற்றம் நிகழ்ந்து வரும் காலகட்டம்’

தென்மாநிலங்களில் இருக்கும் வட இந்தியத் தொழிலாளர்களைப் பொருத்தவரை, பண்பாட்டு ரீதியாக இப்போது நாம் மாற்றம் நிகழ்ந்து வரும் காலகட்டத்தில் இருக்கிறோம் என்கிறார் மானிடவியல் ஆய்வாளர் பக்தவச்சல பாரதி.

“தென்னிந்திய நகரங்களில் வேலைவாய்ப்பு காரணங்களுக்காக அவர்கள் தங்கி இருந்தாலும், அவர்களுக்குள் குழுவாகச் சந்தித்துக்கொள்வது, உரையாடுவது என்று அவர்கள் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். நீண்ட காலமாகத் தங்குபவர்களுக்கு இங்குள்ள மொழியைக் கற்றுக்கொள்வது தவிர்க்க முடியாதது ஆகிறது. இங்கு உணவகத்தில் ஒரு வட இந்தியத் தொழிலாளர் பணியாற்றுகிறார் என்றால் அவர் தென்னிந்திய உணவுகளை உண்ணத் தொடங்குவார். அவ்வாறு அவர்கள் ‘ஓரினமாவது’ மெல்ல மெல்ல நிகழ்ந்து வருகிறது,” என்று கூறுகிறார் அவர்.

அவர்களின் கடவுள் மற்றும் வழிபாடு குறித்து பேசும்போது,”எல்லோருக்கும் முதலில் இஷ்ட தெய்வம், பின்பு வீட்டு தெய்வம், அதன்பின் குல தெய்வம் கடைசியாக ஊர் தெய்வம் என்று இருக்கும். அவர்களுக்கும் இது மாதிரியான தெய்வங்கள் இருக்கும். அந்த தெய்வங்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்து அவர்கள் வழிபடுவார்கள். இங்குள்ள ஒரு கோயில் திருவிழாவில் அவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றால் அது பொழுதுபோக்கிற்காக மட்டுமே இருக்கும். ஒருவேளை இங்குள்ள ஊர் தெய்வங்களை அவர்கள் பக்தியுடன் வணங்கினாலும், இதுவும் ஏதோ ஒரு தெய்வம் என்ற அளவிலேயே வணங்குவார்கள்,” என்கிறார் பக்தவச்சல பாரதி.

1200-69151981-unity-of-different-religions

“வட இந்திய தொழிலாளர்கள் இன்னும் விடுதிகளிலோ, வேறு இடங்களிலோ குழுவாக வாழ்கிறார்கள். இங்குள்ள குடியிருப்புகளில் இன்னும் நம் அண்டை வீட்டுக்கார்களாகவில்லை. இங்குள்ள மக்களுக்கு அவர்களுக்கு இருக்கும் உறவு என்பது பணி செய்யும் இடத்திலேயே நிகழ்கிறது. சந்தைகள், சாலைகள் என எல்லா இடங்களிலும் அவர்களின் இருப்பை நாம் அறிகிறோம். ஆனால், அவர்களுடன் முகத்துக்கு முகம் நேராகப் பார்த்து உறவாடும் வாய்ப்பு இன்னும் வரவில்லை. அப்படி வந்தபின்தான் இங்குள்ள பொதுச்சமூகம் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு வரும்,” என்று வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்குள்ள சமூகத்தில் இன்னும் முழுமையாகக் கலக்காதது குறித்து பக்தவச்சல பாரதி கருத்துத் தெரிவித்தார்.

Courtesy : bbc tamil

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here