இந்தியாவின் ‘இறுதிச்சுற்று’ வீராங்கனை மேரி கோம்!

0
1196

திருமணம் ஆனதும் பல பெண்களுக்கு அவர்களது கனவுகள் கானல் நீர்தான். தங்களது குடும்ப சூழலிருந்து விடுபட முடியாமல், தனது கனவுகளுக்கு தடைப்போட்டு வாழ்க்கையை ஒரு மனக்குறையுடன் நகர்த்திக் கொண்டிருப்பார்கள்.ஆனால் இரண்டிலும் வெற்றிப் பெற்று குடும்பத்தையும் கனவையும் எப்படி ஒரு சேர பயணிப்து என்று சமுகத்துக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார் மேரி கோம்.

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர், மூன்று குழந்தைகளுக்கு தாயார்; இந்தியாவின் ஒதுக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக தன்னை, இந்திய மகளிர் குத்துச்சண்டை விளையாட்டில் உலக அரங்கில் நிறுத்தியவர் மணிப்பூர் மண்ணில் பிறந்த மேரிகோம்.

மேரிக்கு இந்த வெற்றிகள் எளிதாக கிடைக்கவில்லை பல தடைகளைக் கடந்துதான் மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில் தனக்கென தனி அடையாளத்தை தேடிக் கொண்டுள்ளார். மேரியின் குத்துச்சண்டை பயணம் அடுத்த ஆண்டு வரும் ஒலிம்பிக் போட்டியுடன் நிறைவு பெறப் போவதாக அறிவித்திருக்கிறார் இந்த பாக்ஸிங் சிங்கம்.

படிப்பில் கவனமாக இருந்த மேரி :

சிறுவயதில் இருந்தே தடகள போட்டிகளில் மேரிக்கு ஆர்வம் இருந்தது. தன்னுடைய பள்ளி காலங்களை மொய்ரங் மற்றும் இக்பாலில் முடித்த மேரி ,தன்னுடைய எதிர்கால கனவுக்கான தடயங்களை தன்னுடைய பள்ளி நாட்கள் கொடுத்தாலும் தனது படிப்பிலும் கவனமாக இருந்திருக்கிறார் மேரி.

மேரியின் பாக்ஸிங் ஆர்வம் :

பாக்ஸிங் மீது ஆர்வம் 17-வது வயதில் ஏற்பட்டது. அதற்குக் காரணம் டிங்கோ சிங். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவரான டிங்கோ சிங் ஆசிய குத்து சண்டை போட்டியில் பதக்கம் வென்றதைப் பார்த்துத்தான் மேரிக்கு குத்து சண்டையில் தானும் பயிற்சி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தன் கனவை மெருகேற்ற நர்ஜித் சிங்கிடம் பயிற்சிப் பெற்றார் மேரி கோம்.

மேரி கோமின் பதக்க வேட்டை 2001-ஆம் ஆண்டு வெள்ளி பதக்கத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உலக இளைஞர் மகளிர் குத்து சண்டை பிரிவில் தங்கம் வென்றார். 2002-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அனைத்து இந்தியர்களையும், இந்தியாவின் செயல்படாத பகுதி என்று அழைக்கப்படும் வடகிழக்கு இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தார்.

அடுத்தடுத்த வெற்றிகளால் திளைத்துக் கொண்டிருந்த மேரி கோம் 2005-ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான கரங் ஒன்ஹோலர் ஓம்மை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சிறிய இடைவேளை எடுத்துக் கொண்ட மேரிக்கு இரட்டை சந்தோஷம், இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாரானார்.

அதிர்ச்சிக் குத்து விட்ட மேரி :

திருமணமான பெண் தனக்கு பிடித்த வேலைக்கு மீண்டும் திரும்பும் போது என்ன விமர்சனங்கள் எழுமோ மேரிக்கு அதுவே நிகழ்ந்தது.
திருமணத்திற்கு பிறகு தன்னுடைய விளையாட்டு வாழ்க்கையை தொடர்ந்த மேரிக்கு எதிர்மறையான விமர்சனங்களே அதிகம் எழுந்தன.திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாராகி விட்டார். இனி, மேரியால் பழையபடி விளையாட்டில் ஆர்வம் செலுத்த முடியாது. அவரது குத்துக்களுக்கு வலிமைக் குறைந்து விடும் என்று அறைகூவல்கள் எழுந்தன.அத்தனை அறைகூவல்களையும் உடைத்து 2008 ஆம் ஆண்டு ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து சீனாவில் உலக மகளிர் சாம்பியன்ஷிப் பிரிவில் தங்க பதக்கம் வென்றார் மேரி. 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிபிக் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கம் வென்று அவரைப் பற்றி எழுந்த அறைகூவல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.

சமூக சேவை

மேரி குத்து சண்டையில் மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் ஆர்வம் மிக்கவர். வன விலங்குகளை சர்க்கஸ்களில் பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவர். குத்துச்சண்டைப் போட்டியில் ஆர்வமுள்ள இளம் பெண்களும் குத்துச்சண்டைப் பயிற்சிப் பெற மணிப்பூர் மாநிலத்தில் பயிற்சி மையம் அமைத்து வருகிறார். மேரி வெற்றி பெற்ற இடங்களிளெல்லாம் பெரும்பாலும் கூறியது,” மனமும் எண்ணமும் ஒரு செயலில் உறுதியாக இருந்தால் நிச்சயம் நீங்கள் நினைத்த இலக்கை அடையலாம்”, என்பதுதான். இதுதான் இளைஞர்களுக்கு மேரி கூறும் வெற்றி மந்திரம்.

மேரி கோம் பெற்ற விருதுகள் :

விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்படும் அனைத்து கெளரவ விருதுகளும் மேரி கோமிற்கு வழங்கப்பட்டுள்ளது. அர்ஜுனா விருது ,பத்மஸ்ரீ ,பத்மா பூஷன் விருது, ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது என மேரி வாங்கிய விருது பட்டியல் அவரது பதக்க பட்டியலை போல் நீண்டு கொண்டே செல்லும் .

மேரி கோம்மாக நடித்த பிரியங்கா :

பாலிவுட் இயக்குனர் ஓமங் குமார் மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை 2014 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுத்து மேரி கோமிற்கு பெருமை சேர்த்தார். மேரி கோம்மாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.இப்படத்தில் சிறப்பாக நடித்தற்காக மேரிகோமின் வாழ்த்தையும் பெற்றார் பிரியங்கா. உலக அளவில் இப்படம் 950 மில்லியன் வசூலித்தது. இதில் வேடிக்கையான செய்தி என்னவென்றால் இப்படத்தில் நடித்ததற்காக பிரியங்காவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மேரி தனது விளையாட்டு பயணத்தில் சம்பாதித்ததை விட பல மடங்கு அதிகம்.

இந்திய குத்து சண்டை விளையாட்டு வரலாற்றில் ஆண்கள் சாதித்தை விட மேரி கோமின் ஆட்சியே கடந்த பத்து வருடமாக மேலோங்கியிருந்தது . வரும் 2016 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே மேரி கோமின் கடைசி பதக்க வேட்டை. அவரது ஒய்வு குறித்த முடிவு இந்திய குத்து சண்டை ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், நிச்சயம் மேரி ஒலிம்பிக் ஓய்விற்கு பிறகு பயிற்சியாளராக இருந்து நூறு மேரிகோம்களை இந்தியாவிற்காக உருவாக்கி ஒலிப்பிக்கில் இந்தியாவை தலை நிமிர செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்