கொரோனா காலத்தில் கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஊரடங்கால் தொழில்கள் மற்றும் வர்த்தகம் முடங்கியுள்ளதை அடுத்து வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத்தவனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.

இந்நிலையில் ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஊரடங்கு காலத்தில் வங்கி கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு (ஜூன் -4)இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ரிசர்வ் வங்கி பதில்மனு தாக்கல் செய்தது. அதில்; மாதத்தவானை செலுத்த அவகாசம்  வழங்கப்பட்டுள்ளதால் வட்டியை தள்ளுபடி செய்ய இயலாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வட்டியை தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும், அது ஏறக்குறைய இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபியில் 1% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி தள்ளுபடியால் வங்கிகளின் நிதிச்சுழல் பாதிக்கப்படும் என்றும்,

அது முதலீட்டாளர்களின் நலனை பாதிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணமாக இருக்கும் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here