வங்கிக்கணக்கில் ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்துள்ள நிலையில், திடீரென வங்கி திவாலானால், மக்களின் பணத்துக்கு என்ன பாதுகாப்பு வைத்துள்ளீர்கள் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒவ்வொரு வங்கியும் அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளரின் இருப்புத்தொகைக்கு ரூ. ஒரு லட்சம்வரை காப்பீடு செய்துள்ளன. இதன்படி ஒரு வாடிக்கையாளர் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்புக்கணக்கு, டெபாசிட் என எத்தனைக் கணக்குகள் வைத்திருந்தாலும் வங்கி திவாலானால், அந்த வாடிக்கையாளர் எத்தனை லட்சம் இருப்பு வைத்திருந்தாலும், அந்த வாடிக்கையாளருக்கு அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் மட்டுமே திரும்பக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 16.5 கோடி பேர் வங்கிக் கணக்குகளில் ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்துள்ளது தெரியவந்துள்ளது. வங்கிகள் திவாலானால், இந்த 16.5 கோடி பேருக்கும் அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் மட்டுமே இழப்பீடாகக் கிடைக்கும்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் தகவலை அடிப்படையாகக் கொண்டு பிரதீப் குமார் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 25 ஆண்டுகளாக வங்கியின் வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டுத்தொகையை வங்கிகள் மாற்றாமல் இருக்கின்றன. இப்போது பல வங்கிகள் வாராக்கடன் சுமையால் திணறுகின்றன.

திடீரென ஏதாவது வங்கி திவாலானால் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான வைப்புத்தொகை காப்பீடு மற்றும் நிதி உறுதியளிப்பு நிறுவனத்துக்கும் உத்தரவிட வேண்டுமென்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் தலைமையில் நீதிபதிகள் வி.கே.ராவ் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை (நேற்று) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வங்கிகளில் ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

மக்களின் பணம் முழுமையாகக் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. இது பொதுநலன் சார்ந்த பிரச்சினை.இதில் சட்டப்படி மக்களின் பணத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக மத்திய அரசும், வைப்புத்தொகை காப்பீடு மற்றும் நிதிஉறுதியளிப்பு நிறுவனமும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையே காப்பீட்டுத்தொகை உச்ச வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியானது. ஆனால், அதன்பின் எந்தவிதமான தகவலும் இல்லை, நடவடிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy : The Economic Times

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்