2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கொடுத்தது உண்மை தான் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மராத்தி சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் அவர் கூறுகையில் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று உறுதியாக ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எங்கள் முன் இருந்த சவாலாக இருந்தது.

இதனால் சாத்தியமில்லாத சில வாக்குறுதிகளை அளித்தோம். ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்காது. ஆனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள். அதனால், செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்; மக்கள் எங்களை கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் சிரிக்கிறோம் என தெரிவித்தார்.

நிதின் கட்கரியின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு கட்சித் தலைவர்களும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். நிதின் கட்கரியின் பேச்சை டிவீட் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக போலியான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளது. மக்களின் கனவை சீர்குலைத்து, அதில் ஆட்சியமைத்துள்ளது. கட்கரி நீங்கள் கூறியது சரிதான் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here