வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் வதந்தி: தபால் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

0
267

தபால் நிலைய சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் ரூ.15 லட்சம் தொகையை கணக்கில் மத்திய அரசு செலுத்தும் என்று பரவிய வதந்திகள் காரணமாக கேரள மாநிலம் மூணாறில் தபால் நிலைய வாசலில் கணக்குத் தொடங்க பொதுமக்கள் நீண்ட நெடும் வரிசையில் முண்டியடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால், மத்திய அரசு 15 லட்சம் ரூபாயை தவணை முறையில் தர உள்ளதாக போலி தகவல் ஒன்று கடந்த சில நாட்களாக வாட்ஸ்ஆப்பில் பரவி உள்ளது.

இதனை நம்பி கேரளாவில் உள்ள மூணாறு பகுதியை சேர்ந்த பல தேயிலை தொழிலாளர்கள், அங்குள்ள தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க 100 ரூபாய் மற்றும் ஆதார் அட்டையுடன் சென்றுள்ளனர்.

எஸ்டேட் தொழிலாளர்கள் பலர் தபால் அலுவலகம் முன்பு அக்கவுண்ட் தொடங்க குவிந்தனர். வதந்தி பரவிய வேகத்தில் பலர் அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு டாக்சிகளிலும் சொந்த இருசக்கர வாகனங்களிலும் வந்து தபால் நிலையத்தில் கணக்குத் தொடங்கக் குவிந்தனர். 

இதனையடுத்து 2 நாட்களில் ஆயிரக்கணக்கானோர் தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கியுள்ளனர். கடைசியில் தபால் துறை அந்த மாதிரி ‘சிறப்புச் சலுகைகள்’ எதுவும் இல்லை என்று அறிவித்தனர். 

இது ஒரு புறமிருக்க திங்களன்று இன்னொரு வதந்தி பரவியது, தொழிலாளர்களுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்பதே அந்த வதந்தி, இந்த வதந்தியை நம்பி தேவிக்குளம் ஆர்டிஓ அலுவலத்திற்கு நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பங்களுடன் குவிந்ததும் நடந்தது. 

அலுவலகத்தை திறக்கும் முன்பே இப்படிப்பட்ட நீண்ட வரிசையைப் பார்த்து அதிகாரிகள் திடுக்கிட்டனர். அதன் பிறகுதான் வதந்தி பற்றி அவர்களுக்குத் தெரியவந்தது. இதனையடுத்து இந்த மாதிரி திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர்கள் நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு வெளியிட நேரிட்டது. 

நோட்டீஸ் ஒட்டப்பட்டும் கூட்டம் குறையவில்லை. கடைசியில் வருவாய் டிவிஷினல் அலுவலகம் போலீசாரிடம் கூறி வதந்தி பரப்புவோரை பிடிக்குமாறு கோரிக்கை வைத்தார்.