மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மத்திய வங்கக் கடல் மீது வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி தீவிரம் அடையத் தொடங்கியது. மேகங்களின் சுழற்சி தீவிரம் அடைந்ததால் மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதை அடுத்து மத்திய வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி எதிரொலியால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஆந்திரம், ஒடிசா, தெலங்கானா கரை, அதை ஒட்டிய உள்பகுதிகளிலும் மழை தீவிரம் அடையக்கூடும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வரும் 23ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தில் 9 செ.மீ.மழை பெய்துள்ளது.திருப்புவனத்தில் 7 செ.மீ. மழையும் ராஜபாளையத்தில் 6 செ.மீ.மழையும் பெய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here