நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார். இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. இதனிடையே சொராபுதீன் சேக் என்கவுன்டர் வழக்கிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், நீதிபதி லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிஆர் லோன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான இரண்டு நபர் அமர்வின் விசாரணைக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர், வழக்குகள் ஒதுக்கப்படுவதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினர். இந்திய நீதித்துறையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால், இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை இந்த புதிய அமர்வில் விசாரணை நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள்: நீங்கள் யாரையாவது சார்ந்து இருப்பவரா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்