சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக உண்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார். இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார்.

இந்நிலையில் நீதிபதி லோயா மரணம் குறித்து, கடந்த நவம்பரில், ’தி காரவன்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மொஹித் ஷா, நீதிபதி லோயாவிடம் சாதகமான தீர்ப்புக்காக 100 கோடி ரூபாய் வரை தருவதாக பேசியிருப்பதாக லோயாவின் சகோதரிகளில் ஒருவர் அனுராதா பியான் கூறியிருந்தார். லோயாவின் தந்தை ஹர்கிஷனும் இதனை உறுதி செய்திருந்தார்.

மேலும், லோயா அதிகாலை 5 மணிக்கு மரணமடைந்ததாக மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அவரது மரணம் காலை 6.15 மணிக்கு ஏற்பட்டதாக மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதகாவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனால் நீதிபதி லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிஆர் லோன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பான வழக்கினை தற்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஏஎம் கன்வில்கர் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், லோயா மரணம் தொடர்பான வழக்கில், உண்மையான முறையில் விசாரணை நடைபெற, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான கோரிக்கை மனுவில் 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து விரைவில் ஜனாதிபதியைச் சந்திந்து இது தொடர்பான கோரிக்கை மனுவினை அளிக்கவுள்ளனர்.

நன்றி: scroll.in

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்