நீதிபதி லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார். இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடுத்தது. இதனிடையே சொராபுதீன் சேக் என்கவுன்டர் வழக்கிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், நீதிபதி லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிஆர் லோன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான இரண்டு நபர் அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது.

loya

அப்போது நடைபெற்ற விசாரணையில், லோயா மரணம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு மகராஷ்டிரா மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் இது தொடர்பான ஆவணங்களை மகாராஷ்டிர மாநில அரசு தாக்கல் செய்தது.

இதனிடையே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர், வழக்குகள் ஒதுக்கப்படுவதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினர். இந்திய நீதித்துறையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால், லோயா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.

அப்போது மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, லோயா மாரடைப்பால்தான் காலமானார் என வாதிட்டார். மேலும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனுதாரார்கள் விவரங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

வாதங்களுக்கிடையே, உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஆவணங்களின் அடிப்படையில் லோயாவின் மரணம் இயற்கையானது என்றார். மகராஷ்டிர மாநில அரசின் வாதத்தினைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை பிப்.2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த லோயா தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here