கல்லூரிகள், அலுவலகங்கள் என நீளும் ஆடைக்கட்டுப்பாடு அதை ஆதரிக்கும் ஊடகங்கள்…இதுகுறித்து சில ஃபேஸ்புக் பதிவுகள்…

விலாசினி ரமணி

மார்க்ஸியம், லெனினியம், அம்பேத்கரியம், பெரியாரியம், கம்யூனிஸம், காந்தியவாதம், தாராளவாதம், இடதுசாரி, வலதுசாரி எல்லாம் கரைத்துக்குடித்தாலும் இலங்கை முதல் சிரியா வரை இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், சர்வதேச அரசியல் என்று வெளுத்துவாங்கினாலும் பெண்ணியம் என்று வந்தால் பல ஆண்களின் பெரு மூளைக்குள் என்ன இருக்கிறது என்று அவர்களாகவே வெளிப்படுத்திக்கொள்ள இந்த சமூக வலைதளங்கள் நிறைய சந்தர்ப்பங்களை அடிக்கடி வழங்குகின்றுன. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

Kutti Revathi

நம் மாநிலத்தின் மிகச்சிறந்த வசதியான உடை, லெக்கின்ஸ்!
காரணங்கள்:

1. அதிக வெப்ப நாட்கள் கொண்ட, நம் வாழ்வில், புடவைகள் ஆரோக்கியமானவை இல்லை. இடுப்பு தெரிகிறதா, மார் தெரிகிறதா, புடவை நழுவுகிறதா என்று புடவையை ஒதுக்கி விடவே நமக்கு நேரம் போதாது. எப்பொழுதாவது நேரமும், வாய்ப்பும் இருக்கும் போது புடவையை அணிந்து மகிழலாம்.

2. சமையலையும், குழந்தைகளையும், பொதுவேலைகளையும் கவனிக்க லெக்கின்ஸ், ஜீன்சை விடச் சிறந்த உடை. தடிமனான ஜீன்ஸ், அதிகப்புழுக்கத்தையும் இறுக்கத்தையும் கொடுக்கும். லெக்கின்ஸ் இத்தகைய தொல்லைகளை அளிக்காத உடை.

3. இன்றைய பொருளாதார நிலையில், குறைந்த உடைச்செலவை நிர்வகிக்க லெக்கின்ஸ் உடையே வாய்ப்பாக இருக்கும். புடவை என்று வாங்கினால், அதனுடன் பாவாடை, ப்ளவுஸ், உள்ளாடைகள், ஃபால்ஸ், ப்ளவுஸ்க்கு லைனிங் இன்ன பிற அதிகமான செலவை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்று நீவீர் அறிவீர். அதுமட்டுமல்ல, புடவை அணிந்து சமையலறையில் வேலை செய்வது எவ்வளவு கொடுமை என்று உங்கள் தாயிடமும் மனைவியிடமும் கேட்டுப்பாருங்கள். அதற்கு மாற்றாகத்தான், நைட்டி வந்தது.

4. மேலும், லெக்கின்ஸ், மாதவிலக்கு நாட்களுக்கு, கருவுற்ற காலத்திற்கு மிகவும் வசதியான உடை. உடலுடன் பிணைந்திருந்து எந்த அசெளகரியத்தியும் கொடுக்காது. இந்த வகையில், சுடிதாரை விடவும் சிறந்த உடை என்பேன்.

5. லெக்கின்ஸ்களின் நிறத்திற்கு ஏற்ற அல்லது மாறான விதவிதமான ‘டாப்களை’ அணிந்து உற்சாகம்பெறலாம். அதிலும் கழுத்துப்பகுதியிலும் கைப்பகுதியிலும் விதவிதமான ‘கட்’வைத்து உயர்தர, நவீன உடையாக்கலாம். இதனால், பல வேலைகளை ஒரே சமயத்தில் கையாளும் பெண்கள், உடைகளுக்கு அதிகக்கவனமோ நேரமோ கொடுக்கவேண்டியதில்லை.

6. இந்த ‘லெக்கின்ஸ்’ ட்ரெண்டும் விரைவில் மாறும் என்று நம்புகிறேன். இன்று லெக்கின்ஸை ரகசியமாக விரும்பி ஃபோட்டோ எடுத்து, வெளிப்படையாக வெறுப்பது போல் காட்டிக்கொள்ளும் ஆண்களின் மகள்களும் மருமகள்களும் எதிர்காலத்தில், காற்றோட்டமான, குட்டைப்பாவாடைகள் அணியும் காலம் வரும். அதை தந்தையர் ஏற்றே ஆகவேண்டும். ஏனெனில், மகள்களின் அசெளகரியங்களை மாற்றப் போராடும் ஒரே ஆண்வகையினம் “தந்தையர்” மட்டுமே என்பதில் எனக்கு மாறாத கருத்து உண்டு.

7. விரைவில், லெக்கின்ஸ் பள்ளிச் சீருடையாகவும் மாறும் வாய்ப்பிருக்கிறது.

8. ஆண்களுக்கும் லெக்கின்சை உடையாகப் பரிந்துரைக்க விரும்புகிறேன். டைட் ஜீன்ஸ், மற்றும் குடித்துவிட்டு தெருச்சாலைகளில் விழுந்து கிடக்கையில் நழுவும் வேட்டி இவையெல்லாம் ஆண்களுக்கு அழகே இல்லை. கைலியும் அந்த வகையில் ‘லெக்கின்ஸ்’ உடன் சேர்கிறது.

9. ‘நைட்டி’ உடை மீதும் அந்த உடை பரவலான போது, ஆண்களுக்கு இதே வெறுப்பு இருந்தது. பெண்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற உடைகளைக் கண்டறியும்போது ஆண்கள் தொல்லைக்காவது வழக்கமே.

10. எந்த உடை அணிந்தாலும், பெண் மீதான பாலியல் வன்புணர்வு என்பதை நியாயப்படுத்த ஆண்கள் பக்கம் மூட்டை மூட்டையாகக் காரணங்கள் இருக்கின்றன என்பதை எந்தச் சிறிய பெண்ணும் இன்று அறிந்து வைத்திருக்கிறாள்.
இன்னும் நிறைய பலன்கள், ‘லெக்கின்ஸால்’ உண்டு என்றாலும், அடுத்த முறை உங்கள் ‘லெக்கின்ஸ் வெறுப்பின்’ போது அவற்றைப் பதிவிடுகிறேன்.

Geeta Ilangovan

சுனாமியில் அதிக அளவில் பெண்கள் இறக்கக் காரணம், செடிகொடிகளில் சிக்கிக் கொண்ட புடவையும், தலைமுடியும் தான்…

Olivannan Gopalakrishnan

சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பெரிய கோயிலில் தீ விபத்து நடந்த போது இறந்தவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள். ஆய்வறிக்கை கூறும் முககியக் காரணம் பெண்களின் உடை; புடவை அவர்கள் தப்பித்து ஓட தடையாக இருந்தது. பாரம்பரியம் காக்கப் பட வேண்டுமெனில் அதன் கால வரையறை என்ன? பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது என்ற கலாச்சாரக் காவலர்கள் கூட பாரம்பரியம் காக்க பட வேண்டும் என்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

Thanthugi Blogspot

பெண் என்பதாலேயே கடும் அவமதிப்புகளுக்கும் தீராத மன உளைச்சலுக்கும் ஆளாகிவந்த விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பொங்கியெழாத “செலக்டிவ் அம்னீஷியா” பெண்ணியம் லெக்கிங்ஸ் விசயத்திலாவது விழித்தெழட்டும்.

Jothimani Sennimalai

குமுதம் ரிப்போர்ட்டர் லெக்கின்ஸின் பெயரால் பெண்களை கேவலப்படுத்தியுள்ளது ஆபாசத்தின் உச்சம்.காற்றுக்கு விலகாத ஆடை என்று ஏதாவது உண்டா? அதை மறைந்திருந்து படம் எடுத்து அட்டைப்படத்தில் போடும் அளவிற்கு குமுதம் தரம்தாழ்ந்து விட்டது. சேலை, சுடிதார் என்று எந்த உடை விலகியிருந்தாலும் படமெடுத்துப்போட ஆரம்பித்தால் ஒரு பெண் கூட வெளியில் நடமாட முடியாது. இதை பெண்கள் மட்டுமல்ல மொத்த சமூகமும் கண்டிக்க வேண்டும். பெண்களின் உடைதான் பிரச்சினை என்பதே ஒரு வக்கிரமான பார்வைதான். பிறகெப்படி இரண்டு வயது குழந்தை கூட பாலியல் வன்புணர்விற்கு ஆளாகிறது என்று கேட்டு கேட்டு சோர்வாகி விட்டது. குமுதம் இந்த அட்டைப்படத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பா. வெங்கடேசன்

புலனாய்வு பத்திரிக்கைகளின் கவர் ஸ்டோரிகளை, நாம் பெரியதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அவைகள் கட்டுக்கதைகளின் தொகுப்பு. கற்பனை வளங்களின் வளர்ப்பு. இரண்டாம் தரமில்லை. மூன்றாம் தர கட்டுரையாளர் எழுதி பழகிக்கொள்ள அதுவொரு இடம் அவ்வளவே. இதில் எந்தவித புலனாய்வு பத்திரிக்கைகள் என்ற பாகுபாடுகள் இல்லை. ரிப்போர்ட்டர், ஜூ.வி, நக்கீரன், நெற்றிக்கண் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. அட்டைப்படம் நிறம் மட்டுமே வேறுப்படும்.

லெக்கின்ஸ் சமாசரத்தை மிஞ்சுகின்ற அளவில் , சில ஆண்டுகளுக்கு முன் நக்கீரனில் ஒரு கவர் ஸ்டோரி. இளைஞர்களை குறி வைக்கும் ஆன்ட்டிகள். தலைநகரத்தில் சீரழியும் கலாச்சாரம். பரங்கிமலை ஜோதி தியேட்டர் பிட்டு பட போஸ்டரை மிஞ்சும் கிளுகிளுப்பான அட்டைப்படம். சாட்சாத் நக்கீரனில் வந்த கண்றாவிதான் இது. இவர்களுக்கு சமுதாய நலன், சமூக அக்கறை, இவையெல்லாம் இவர்களுக்கு பொருட்டு இல்லை. வியாபார உத்திகளுக்கு, சர்குலேசன்களுக்கு எதை வேண்டுமானலும் எழுதி தள்ளுவார்கள்.

இவைகள் மட்டுமில்லை. ஒவ்வொரு புலனாய்வு பத்திரிக்கைகளும் ஒரு அரசியல் கட்சியின் மறைமுக ஆதரவாளராக இருப்பார்கள். நக்கீரன் திமுகவின் வளர்ப்பு பிராணி என்றால், ரிப்போர்ட்டர் அதிமுகவிற்கு. ஜூ.வி நேரத்திற்கு தகுந்தால் போல அணி மாறிக் கொள்ளும். அந்தந்த ஆதரவு கட்சிகளுக்கு ஏற்றாற் போல கருத்துக்கணிப்பு வெளியிடுவது, பிடிக்காத கட்சிகளின் மீது அவதூறு பரப்புவது தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. சமயங்களில் இளைஞர்களை கவர கில்மா கவர் ஸ்டோரிகளை கூட மஞ்சள் பத்திரிக்கை லெவலுக்கு எழுதி பணம் பார்ப்பார்கள்.

பத்திரிக்கை தர்மத்தை கிலோவுக்கு இவ்வளவு என்று ரேட் பேசுபவர்களின் வார இதழ்களை புறக்கணிக்க வேண்டிய நேரமிது. இதை நீங்கள் செய்வீர்களா?

கார்த்திக் கிருஷ்ணமூர்த்தி

லெக்கின்ஷ எதிர்த்து பொங்குர போராளிகள் ஒரு ரெண்டு நாள் தொடர்ந்து ஜீன்ஸ் பேன்ட்டோட சுத்தி பாருங்க அப்ப தெரியும்!!
#‎ஐ‬ ‪#‎சப்போர்ட்‬ ‪#‎லெக்கின்ஷ்‬!!

Vasu Murugavel

இது ஒரு வேலைன்னு ஒருத்தன் செய்திருக்கிறான். அதை ஒருத்தன் அட்டைப் படமா போட்டு இருக்கிறான். எதை எப்படி எழுத வேண்டும், ஒரு பத்திரிகையின் தார்மீக அறம் என்ன..? புரிந்துணர்வு இல்லாதவர்கள் ஊடகத்துறைக்கு வந்தால் இது தான் நடக்கும்.

கவிஞர் சுகிர்தராணி
கவிஞர் சுகிர்தராணி

Sukirtha Rani

லெக்கிங்ஸ் அணிந்த பெண்களை, அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தோ ஒளிந்திருந்தோ கொஞ்சமும் நேர்மையின்றி சகமனிதர் என்னும் உணர்வின்றி, அவர்களின் ஆடைவிலகும்போது பின்புறமாக நின்று புகைப்படங்கள் எடுத்து அதை ஒரு கட்டுரை என்ற பெயரில் தங்கள் வக்கிரப் புத்தியையும் ஆணாதிக்கப் பார்வையையும் வெளிப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர் குழுவுக்குச் சொல்லிக்கொள்ள ஒன்றிருக்கிறது.. நீங்கள் புகைப்படம் எடுக்க இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம்..எங்களிடமே கேட்டிருக்கலாம்..நாங்களே விதவிதமாய்த் தந்திருப்போம்.. சீ..

Kavin

பெண்களின் உயிரே போய்க்கொண்டிருக்கிறது விஷ்ணு ப்ரியாவுக்கு நிகழ்ந்ததுபோல. உண்மையைச் சொன்னால் வேலை போகுமோ, வாழ்வாதாரம் போகுமோ, உயிரே போகுமோ என மகேஸ்வரி அச்சப்படவேண்டியுள்ளது. இது பற்றியெல்லாம் கவர் ஸ்டோரி போடலாமே… அதை விட்டுவிட்டு நாங்கள் அணியும் லெக்கின்ஸ்தான் தலையாய பிரச்சனையா? காற்றில் எப்போது உடை பறக்கும் என கேமிராவை எடுத்துக்கொண்டு அலையச் சொல்வதற்கு பதில் விஷ்ணுப்ரியாக்கள் மகேஸ்வரிக்கள் பக்கம் கேமிராவைத் திருப்பச் சொல்ல மனசு வராதே உங்களுக்கு.

கணேஷன் குரு

நமது ஃபேஸ்புக் போராளிகள், “லெக்கின்ஸ்” விஷயத்திற்கு வந்துவிட்டதால், நானும் காலுறைக்குள் குதிக்கிறேன்…!!!
முதலில் என் மனோபாவம் சார்ந்து உணரும் சில விஷயங்கள்;

1. அழகானவள் என உணரும் எந்த பெண்ணையும் பார்த்து ஒரு ஆண் சபலப்படுவது இயல்பே, இயற்கையே. சபலப்படவில்லை எனில், அவன் துறவியாக இருக்கவேண்டும் அல்லது ஏதேனும் குறை இருக்கவேண்டும். (இந்த விஷயத்தில் பெண்களின் நிலையை பெண்கள்தான் சொல்லவேண்டும்…!)

2. அழகு, அருவருப்பு ஆகிய இரு விஷயங்கள் தான் உடை விஷயம் எனக்குள் ஏற்படுத்துகின்றன. ஆபாசம் என எதையும் உணர்ந்ததில்லை. (அதுசரி, ஆபாசம் என்பது தமிழ் சொல்லா? புலவர்கள் கூறவும்…!)
3. இரண்டு தலைமுறைக்கு முன் ரவிக்கை போடாதவர்கள் நமது அம்மாக்களும், சகோதரிகளும், மனைவிகளும், பெண் பிள்ளைகளும். ஒரு தலைமுறைக்கு முன் வெகு சகஜமாக கோமணத்துடன் வெளியில் சுற்றியவர்கள் நமது பெரியவர்கள். இப்போது இத்தகைய காட்சிகளை காண்பது அரிது. காலம் மாறிவிட்டது.

4. நிர்வாண உடல்களை விட, நன்கு ஆடை உடுத்தப்பட்ட உடல்கள் தான் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அது, லெக்கின்ஸாக, காஞ்சி பட்டாக, கைத்தறி வட்டாக, எதுவாகவும் இருக்கலாம்.

5. எனக்கு சபலம் ஏற்படுகிறது, எனவே, நீ இம்மாதிரியான உடைகளை உடுத்தக்கூடாது என சொல்வது சரி இல்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஏற்ப பழக்கங்கள் இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது. அதே நேரத்தில், கலாச்சாரங்கள் காலத்திற்கேற்ப மாறுபவை என்பது விதி.

5. இந்திய பெண்கள் இடுப்பும் வயிறும் தெரிய புடவை கட்டுவதே அதிகப்படியான கவர்ச்சி என நினைக்கிற மேற்கத்தியர்களும். உடலை மறைத்தாலும், இறுக்கமாக உடுத்தப்படும் ஜீன்ஸும், டீ ஷர்ட்டுமே கவர்ச்சி என நினைக்கிற இந்தியர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
ஆக, பெண்ணோ, ஆணோ, உடை விஷயத்தில் என் பார்வை இவ்வளவுதான், அழகாக, நேர்த்தியாக உடுத்துங்கள். அருவருப்பாக உடுத்தாதீர்கள், அதை என்னால் காணமுடியாது…!!!

Geetha Narayanan

பெண்களுக்குத் தெரியாமல் அவர்களைப் புகைப்படமெடுத்து அட்டை படத்தில் போடுகிற குமுதம் ரிப்போர்ட்டரை கண்டிக்கிறேன்.

Thamizhnathy Nathy

‘லெக்கிங்ஸ்’அணிவது ஆபாசம் என்ற கூப்பாட்டை உடை தொடர்பானதாக மட்டும் பார்க்கவில்லை. கைமீறிப் போகும் ஆண்சார் அதிகாரத்தை மீளுறுதி செய்துகொள்ளும் சமூக மனப்பாங்காகவே பார்க்கிறேன்.
புடவை உடுத்திய, சுரிதாரின் துப்பட்டா பறக்க இருசக்கர வாகனங்களில் பெண்கள் செல்வதைப் பார்க்கும்போது பதட்டமாக இருக்கும். முந்தானை அல்லது துப்பட்டா சக்கரங்களில் சிக்கிக்கொண்டு விபத்துக்காளானால் இதே ஊடகங்களில், “சிக்கியது துப்பட்டா! யுவதி தலை சிதறு தேங்காய்!” என்றோ. “சொருகியது முந்தானை! சறுக்கியது வண்டி!”என்றோ தலைப்பிட்டு செய்தி வெளியாகும்.
வேலைக்கோ, கல்லூரிக்கோ செல்லும் காலைநேரப் பரபரப்பில் இந்த ‘லெக்கிங்ஸ்’சை அணிந்துகொண்டு பறப்பது அவர்களுக்கு இலகுவாக இருந்திருக்கலாம். அந்நேரங்களில் மட்டும் கடிகாரத்தில் நான்கு முட்கள் சுற்றுவது அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். பின்னூட்டமிட்ட நண்பர்களில் ஒருவர் சொன்னார்: பெண்களின் தொடைகள், பின்புறம், நிறம், வடிவம், உள்ளாடைகள்கூட தெரிவதாக. ஆண்களது Tommy Hilfiger, JOCKEY இன்னபிற உள்ளாடைகளின் இலாஸ்டிக் பட்டிகளைப் பார்ப்பது பெண்களுக்கும் உகந்த காட்சியாக இருக்க வாய்ப்பில்லை. மேலும், தெருக்கள் தோறும் சுவர்களைப் பெயர்த்துவிடுவதைப் போல சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் ஆண்களைப் பார்க்கவும் பெண்களுக்குச் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், அவர்கள் அதன் பின்னாலுள்ள அவசரம், அவசியம், பொதுக்கழிப்பறைகளுக்கான தட்டுப்பாடு, சுகாதார வசதிகள் குறித்த அரசின் அசட்டை இவற்றையெல்லாம் கருதி அத்திருக்கோலங்களைக் காணாததுபோல முகத்தைத் திருப்பிக்கொண்டு போகத்தான் போகிறார்கள்.

லெக்கிங்ஸ் அணிவது ஆபாசமென்றால், மேற்குறித்தவை எதனுள் அடங்கும்? ஆபாசத்தில் ஆண் ஆபாசம், பெண் ஆபாசம் என்று உண்டா என்ன?
கால்கள் தெரிய உடையணிவது அழகென்று சில பெண்கள் எண்ணுகிறார்களென்றால் அதுவும்கூட அவர்தம் உரிமையின் பாற்பட்டதே. திரைப்படங்களில், பூச்சியத்துக்குக் கீழ் உறையவைக்கும் குளிரில், உள்ளாடைகளையே உடைகளாக உடுத்தி பெண்களை ஆடவிடும் பாடல் காட்சிகளை கண்ணெடுக்காமல் இந்தச் சமூகம் பார்க்கவில்லையா? அதற்காக, திரைகளைக் கிழித்துத் தொங்கவிட்டுவிட்டார்களா என்ன? உடையணிவதனூடாக உடலமைப்பைக் காண்பிப்பது அழகா இல்லையா என்பதை வயதும் அனுபவமும் பெண்களுக்கு கற்றுத்தரட்டுமே! உடை குறித்த உரிமையானது எல்லை மீறி இதர பொதுசனங்களின் புலன்களுக்கும் நலன்களுக்கும் ஊறு விளைவிக்குமாயின் public nuisance என்று காவற்றுறை பிடித்துக்கொண்டு போகும். அவ்வளவுதானே? அதற்குள் இந்த ‘கலாச்சாரக் காவலர்’கள் பதறுவது ஏன்?

இதை உடை விடயமாக மட்டும் நாம் குறுக்கவேண்டாம். ஒரு பேரங்காடியினுள் உடைகளை அணிந்து பார்க்கும் இடத்திலோ அன்றேல் தங்குமிட விடுதியிலோ இரகசியமாக புகைப்படக் கருவி பொருத்தப்பட்டிருந்தால் அந்தக் குறிப்பிட்ட அங்காடி மீது வழக்குத் தொடுக்கவியலும். அது அடுத்தவர் அந்தரங்கம் சார்ந்தது. அதையே இந்த ஊடகம் செய்திருக்கிறது. இந்த சமூகத்தின்மீதான அடிப்படை நம்பிக்கை குலையுமிடம் இது. இயல்பாக ஓரிடத்தில் நிற்பதைக் கூட படம் எடுத்து அட்டையில் போட்டு விற்றுவிடுகிறார்கள் என்றால்… இனி சர்வசதா காலமும் தமது ஆடை குறித்த பிரக்ஞையோடல்லவா பெண்கள் இருக்கவேண்டும்? காற்றடிக்கிற போதெல்லாம் ‘எந்தக் ‘கமெரா’க் கண் உற்றுப் பார்க்கிறதோ?’ என்றல்லவா பதறவேண்டும்?

நகர்ப்புற வாழ்வில்- திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது, இரவில் பெண்கள் வேலைக்குச் செல்வது, காதலர்கள் சேர்ந்து சுற்றுவது இன்னபிறவற்றையெல்லாம் உலகமயமாதலின் விளைவு என்று ஏற்றுக்கொண்டுவிட்ட அல்லது கண்டுங்காணாமலிருக்கப் பழகிக்கொண்டுவிட்ட ஆணாதிக்க சமூகம், பெண்கள் உடை விடயத்தில் இவ்வளவு கறாராக இருப்பதை, ஆபாசமென்று அனத்துவதை தமது அதிகாரத்தை மீளுறுதி செய்துகொள்ளும் சட்டாம்பிள்ளைச் செயற்பாடுகளில் ஒன்றாகவே பார்க்கவேண்டும்.

Vinothini Satchithananthan

எனக்கு இப்ப ஏனோ தங்கம்மா அப்பாக்குட்டியும், அம்மாவும் ஞாபகத்துக்கு வருகிறார்கள். சல்வார் கமிஸையும், இன்ன பிற நவீன ஆடைகளையும் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஒரு போதும் கோயிலுக்குள் அனுமதித்ததில்லை; தற்போதைய நிலைமை பற்றி எனக்கொன்றுந் தெரியாது. நிற்க: அம்மா என்னைப் பாவடை / புடவை அணியாது கோயிலுக்குப் போக விட மாட்டா! அது அந்தக் காலம்! wink emotion அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்த பிறகு குளிர் காலத்தில் லெக்கிஙஸ் அணியத் தொடங்கினேன்; கறுப்பு வாதுமைகளை ஊற வைத்து ஒரு சோடி லெகிங்ஸை சாயமூட்டினேன்; மிக வசதியான லெகிங்ஸ் – யோகாசனம் செய்யவும், குளிரிலிருந்து தப்பவும்! smile emoticon அதோடு, இந்த மாதிரி அநாகரிகமாக எழுதுபவர்களுக்கும், குட்டைத் தலைமுடியைக் கண்டு ‘இதென்ன கோலம்’? என்று கேட்பவர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை!

Thiru Yo

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிப்படுகிற படமும் கட்டுரையும் ஆபாசம் மற்றும் மனப்பிறழ்வு முற்றியதன் அறிகுறி. இவ்வளவு விகாரமாக சாலையில் மற்றவர்களின் உடைகள், கால் இடுக்குகளை குறிவைத்து நிழற்பட கருவிகளோடு பாய்ந்து துன்புறுத்துகிற நபர்களை முறையான மருத்துவம் செய்து காப்பாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

Kutti Revathi
தமிழ்நாட்டில், பெண்களை அசிங்கமாகப் பேசியும், எழுதியும் விளம்பரம் தேடிக்கொள்வோர் சங்கம் தீவிரமாக வளர்ந்து வருகிறது. ஆண்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பாலியல் வறட்சியின் விளைவு என்று நினைக்கிறேன். தமிழக அரசு, ஆண்களுக்கான வளர்ச்சித்திட்டங்களை, குறிப்பாக, மனவளர்ச்சித் திட்டங்களை வகுக்கவேண்டியதும் அவசரநடவடிக்கையாக்குவதும் அவசியம்.

PG Saravanan

உடை பற்றி பேசும் முடை நாற்ற மனிதர் கருத்தை உடை.
உடைக்குள் ஊடுருவும் கழுவடைகளின் கயமைச் சிந்தைக்கு போடு தடை.
உன் உடை உன் விருப்பம் – மீறி
உடை உடை உடை என்று பேசினால்
நைய்யப் புடை.

Jeevasundari Balan

உடை என்பது அவரவர் சௌகரியத்துக்கானது. அதில் கருத்துச் சொல்கிறேன் என்ற பெயரில் மூக்கை நுழைக்க எவருக்கும் அனுமதி கிடையாது. வாய் இருப்பதால் எதையும் பேசலாம் என்று ஒரு பக்கம் தொடர்ந்து கருத்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் கலாசாரக் காவலர்கள். இப்போது காமிராவைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். ஒருவரின் ஒப்புதலோ அனுமதியோ இன்றி புகைப்படம் எடுப்பது அநாகரிகம் என்பது கூட தெரியாதவர்களா இவர்கள்? முகம் தெரியாவிட்டாலும் இப்படி படமெடுத்து பத்திரிகையின் அட்டையில் போட்டுப் பிழைப்பதை விட இவர்கள் வேறு பிழைப்பு பிழைக்கலாம். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவர்கள் தான் சமூக அவலங்களைத் தோலுரிக்கும் காரியத்தைக் கையில் எடுத்திருப்பவர்களாம்.

எல்லை மீறியிருப்பவர்கள் இவர்கள்தான். ஒரு பெண் எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்க முடியாது. அவளுக்கு அது வேலையும் இல்லை. இந்த உலகம் பாதுகாப்பானது என்ற எண்ணத்தில்தான் பெண்கள் உடன் இருப்பவர்களை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் விதமாக நடந்து கொண்டிருப்பவர்களை, அதிலும் பத்திரிகையாளர்களைப் பற்றி என்ன சொல்வது?
அட்டை முதல் பின் அட்டை வரை பெண்ணில்லாமல், அவள் படமில்லாமல் ஒரு இதழ் தயாரிக்க முடியாதவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். மடிசார் கட்டிய பெண்ணைக் கூட வெளியில் தெரியும் காலைப் படம் பிடித்துக் காட்டுவார்கள். மகா கேவலம்…

லெக்கின்ஸ் உடை குறித்த குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப்படம் மற்றும் கட்டுரையைக் கண்டித்து பல தோழிகளும் தோழர்களும் பதிவிட்டிருக்கிறார்கள். அதற்கான பின்னூட்டங்கள் பல முகம் சுளிக்க வைக்கின்றன. எவ்வளவு அழுக்கும் ஆபாசக் குப்பையும் அவர்கள் மனங்களிலும் அந்த வார்த்தைகளிலும் மண்டிக் கிடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. காற்றில் பறக்காத, உடலின் சதை பிதுங்காமல் உடை உடுத்த வேண்டியதுதானே என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

இனி நீங்கள் சொல்வது போல்தான் நாங்கள் உடை உடுத்த வேண்டுமென்றால், லாரியில் மூடும் தார்ப்பாயில்தான் உடை தைத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். அதுதான் காற்றில் பறக்காது.

Saravanan Kumaresan

ரிப்போர்ட்டர் ஆசிரியர் குழுவினருக்கு,

1. “Twin Birds” போன்ற லெக்கின்ஸ் கம்பனிகளின் மாடல்களுக்கு பணம் கொடுத்து போட்டோ எடுத்து போட்டுருக்கலாம்.

2. கிராம புறங்களில் இன்றும் ஜாக்கெட் அணியாத வயதான பெண்களால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தனி ஒரு கட்டுரை எழுதலாம்.

3. வட கொரியா போன்ற நாடுகளில் உள்ளது போல குறிப்பிட்ட உடைகளை மட்டும் தான் அணிய வேண்டும் போன்ற சட்டங்களை அரசுகளுக்கு பரிந்துரைக்கலாம்.

4. ஆண்கள் கோவணத்துடன் வயல் வேலைகளை செய்வதை சட்டப்படி தடைசெய்ய பரிந்துரைக்கலாம்.

Vel Kumar

இதே போட்டோக்களை எதாவது ஒரு வெப்சைட்டில் பதிவிட்டால் போட்டோ எடுத்தவர் பதிவிட்டவர் மீதெல்லாம் குற்ற வழக்கு பாயும்! பத்திரிக்கை சுதந்திரம் என்கிற போர்வையில் நீங்கள் அதே தவறை சுதந்திரமா செய்திருக்கிறீர்கள்!

Rathna Singh

உங்களுக்கு என்ன பிரச்சனை? உடுத்துரவங்களுக்கும் அவங்க குடும்ப நபர்களுக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். வெள்ளைக்கார மஹாராணிகள் நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா பயணம் செய்யும்போதுகூட ஸ்கர்ட் போட்டுதான் வலம் வந்தாங்க. என்னை பொறுத்தவரை பெண்கள் உடை அணிவது அவர்களுடைய சுதந்திரம். அதில் தலையிடும் யாவரும் பழமைவாதிகள். சுடிதார் வந்தபோதும் இதே களேபரம்தான் 70 80 களில் இங்கு நடந்தது. இப்போது அது பழகிவிட்டது. ஜீன்ஸ்க்கு தடை வேண்டுமென்பீர்கள். சேலை கூட ஜீன்ஸ் போன்று வசதியான உடை கிடையாது. சேலை போன்றதொறு கவர்ச்சியான உடை உலகில் வேரெதுவுமில்லை. சேலையை போன்ற வசதிப்படாத உடையும் வேறேதுமில்லை. ஆண்கள் எபோதுவேண்டுமானாலும் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த பாழாய்ப்போன பெண்கள் மட்டும் ஒவ்வொன்றையும் போராட்டம் செய்ய்தே பெறவேண்டும். என்ன கொடுமை சரவணா!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here