’லிட்டர் ரூ.16க்கு விற்க வேண்டிய டீசல், ரூ.44க்கு விற்பனையாகிறது’

2
803

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பைசாக் கணக்கில் குறைத்துவிட்டு, கலால் வரியை மத்திய அரசு தொடர்ந்து எட்டாவது முறையாக உயர்த்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

கச்சா எண்ணெயின் விலை சர்வதேசச் சந்தையில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 30 டாலருக்கும் கீழே சென்றது. இதனையடுத்து பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலையில் லிட்டருக்கு 85 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. அதேநேரத்தில், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.0.75 மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2ஆகவும் கலால்வரியை மத்திய அரசு உயர்த்தியது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவலா, கடந்த 2014இல் பாஜக அரசு பதவியேற்றத்தின்போது இருந்த விலையைவிட கச்சா எண்ணெயின் விலை தற்போது 72.21 சதவிகிதம் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.19.40ஆக விற்பனையாக வேண்டியது, தற்போது ரூ.59.03க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் லிட்டர் ரூ.15.71க்கு பதிலாக ரூ.44.18க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார். மத்திய அரசு இதுவரை தொடர்ந்து எட்டாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2 கருத்துகள்

ஒரு பதிலை விடவும்