லாரி நிறைய 12 லட்சம் மதிப்பிலான குக்கர்கள்; பறிமுதல் செய்த பறக்கும்படை

0
182

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இரண்டு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி லாரியில் குக்கர் எடுத்து சென்றதால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த குக்கர்களின் மதிப்பு 12 லட்சம் ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து நேற்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மே 2ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.

ஆவணங்கள் எதுவும் இன்றி பணமாகவோ, நகையாகவோ கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் வரை ஆவணங்கள் எதுவுமின்றி ரொக்கமாக கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உதவி தாசில்தார் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சென்னை கும்மிடிபூண்டியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி 2 செல்வதாக தகவல் வந்துள்ளது.

லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் முதல் லாரியை சென்றவர்கள் இதில் காலி அட்டைப்பெட்டிகள் மட்டுமே உள்ளன என்று கூறிவிட்டு நிற்காமல் சென்றுள்ளனர். 2வது லாரியை மடக்கி சோதனை செய்ததில் அதில் குக்கர்கள் இருந்ததாக தெரிய வந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் குக்கர்களை எடுத்து பார்த்தபொழுது அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும், டிடிவி தினகரன் படமும் ஒட்டப்பட்டிருந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஒரு லாரியில் 110 அட்டைப்பெட்டிகளில் 3520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 2 லாரிகளையும் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here