லாக்-அப் டெத் தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டில் பதிவான வழக்குகளில் ஒருவருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் என்பவரும், அவரது சகோதரரும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்திரா சிங் என்பவரின் மகள் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அப்பெண்ணின் தந்தையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் அடியாட்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் ஆயுதம் வைத்திருந்ததாக சுரேந்திரா சிங்கைப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண், முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்துக்கு முன்பு தீயிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தையான சுரேந்திரா சிங்கின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது.

இதனையடுத்து உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் சகோதரர் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.

லாக்-அப் டெத்: கடந்த 2013ஆம் ஆண்டில் 118 லாக்-அப் டெத் சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக ஒரே ஒரு குற்றப்பத்திரிகை மட்டும் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதேபோன்று 2014ஆம் ஆண்டில் 93 சம்பவங்களும், 2015ஆம் ஆண்டில் 97 சம்பவங்களும், 2016ஆம் ஆண்டில் 92 சம்பவங்களும் நடந்துள்ளன. 2013-16ஆம் ஆண்டு வரை பதிவான 400 சம்பவங்களில் ஒரே ஒரு போலீசாருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது.

இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 2013ஆண்டில் 14 சம்பவங்களும், 2014ஆம் ஆண்டில் எட்டு சம்பவங்களும், 2015 மற்றும் 2016ஆண்டுகளில் தலா ஒன்பது சம்பவங்களும் நடந்துள்ளன. இந்திய அளவில் பதிவான வழக்குகளில் 10 சதவிகிதம் உத்தரப் பிரதேசத்தில் பதிவானவை. (Source: NCRB)

இதையும் படியுங்கள்: ’15 பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்