லண்டன் பங்குச்சந்தையில் இருந்து அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் வெளியேறுவதற்கான பணிகளை தொடங்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

பங்குதாரர்களிடம் இருக்கும் 33.47 சதவீத பங்குகளை திரும்பப் பெறுவதற்காக 100 கோடி அமெரிக்க டாலர்களை வேதாந்தா ஒதுக்கியுள்ளது.

லண்டன் பங்குச்சந்தையில் கடந்த 2003-ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட வேதாந்தா குழுமம் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின் இப்போது வெளியேறுகிறது. அப்போது ஒரு பங்கின் விலை 390 பென்ஸ் என்று விற்பனை செய்து, 50 கோடி பவுண்ட்ஸ் பெற்றது.

வேதாந்தா குழுமம் காப்பர், அலுமினியம், இரும்புத்தாது, கச்சா எண்ணெய் மற்றும் உருக்கு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக அப்பகுதி மக்கள் 100 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மே 22-ஆம் தேதி மக்கள் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

போராடிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர் . வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர் . ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் உள்ள அதன் இயக்குனர் அனில் அகர்வாலின் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் அனில் அகர்வால் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய தூதரகத்தில் மனுவும் அளித்தனர்.

மேலும் வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை வைத்தது.

இதனால் லண்டன் பங்குச் சந்தையில் வேதாந்தா பங்குகள் சரிவைச் சந்த்தித்தது . சில காலாண்டுகளுக்காவது லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா பங்குகளை பட்டியலிடுவதை நிறுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்து வந்தன. இதனால், லண்டன் சந்தையிலிருந்து வெளியேறுவதாக வேதாந்தா ரிசோர்ஸ் கடந்த 2-ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதற்கான பூர்வாங்கப்பணிகளை தொடங்கி, லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறுவதற்கான முறைப்படியான அறிவிப்பை வேதாந்தா குழுமம் அறிவித்துள்ளது.

பங்குதாரர்களிடம் இருக்கும் 33.47 சதவீத பங்குகளை வாங்குவதற்காக 100 கோடி டாலர்களை(ரூ.69 ஆயிரம் கோடி) வேதாந்தா குழுமம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வேதாந்தா குழுமத்தின் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் ஒரு பங்குக்கு 10.89(ரூ.750) அமெரிக்க டாலர்கள் விலையைப் பெறுவார்கள்.

மேலும், மார்ச் 31-ம் வரையிலான 12 மாதங்களுக்கான ஈவுத்தொகையாக ஒவ்வொரு பங்கிற்கும் 0.41 அமெரிக்க டாலர் பெறுவார்கள். ஒட்டுமொத்தாக ஒரு பங்கிற்கான விலை 11.30 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வேதாந்தா குழுமம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஜூன் 29-ஆம் தேதி நிலவரப்படி, வேதாந்தா குழுமத்தின் பங்கு விலை 647 பென்ஸ் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அனில் அகர்வாலின் வோல்கானோ இன்வெஸ்ட்மெட் நிறுவனம்தான் ஏறக்குறைய 66.53 சதவீத பங்குகளை வைத்துள்ளது. வோல்கான் அறக்கட்டளை நிறுவனம், வேதாந்தா பங்குகளை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு பங்குவிலை 825 பென்ஸ் என்கிற மதிப்பில் 33.65 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு வாங்க உள்ளது.

முன்னதாக, இம்மாத இறுதியில் லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வேதாந்தா குழுமம் விலகுவதற்கும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்கும் தொடர்பு இருக்கிறதா என நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வாலிடம் கேட்ட போது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கும், லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறுவதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நிறுவனத்தின் அமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here