லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வைர வியாபாரி நீரவ் மோடி இன்று ஆஜராகவுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு நீரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நீரவ் மோடி, நீதிமன்ற காவலில் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 25 ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். அப்போது நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் 28 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.

இந்தநிலையில் காவல் முடிந்து நீதிமன்றத்தில் மீண்டும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஏற்கெனவே நீரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் கடந்த மாத தொடக்கத்தில் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.