லண்டன் பிரையன்ஸ்டன் ஸ்கொயரில் ராபர்ட் வத்ராவுக்கு சொந்தமாக வீடு இருக்கிறது என்று அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைத்தது. அந்த வீடு ராபர்ட் வத்ராவுக்கு சொந்தமானது அல்ல என்று இந்தியா டுடேக்கு கிடைத்த ஆவணங்கள் கூறுகிறது.

லண்டனில் ராபர்ட் வத்ரா வைத்திருந்ததாக கூறப்பட்ட வீடு அவருக்கு சொந்தமானது இல்லை அந்த வீடு பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் வீடு என்று இந்தியா டுடே நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமலாக்க துறை முன்பு ராபர்ட் வத்ரா 3 முறையாக ஆஜரானார்.

இந்த வழக்கில் இதற்கு முன்னர் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் வதேராவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதல் நாள் சுமார் ஐந்தரை மணி நேரமும், 2-ஆவது நாள் சுமார் 9 மணி நேரமும் விசாரணை நடைபெற்றது. எனினும் விசாரணை முழுமையாக நிறைவடையாததால் ராபர்ட் வதேரா மீண்டும் சனிக்கிழமை ஆஜரானார்.

மீண்டும் நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராபர்ட் வத்ரா தனது தாயாருடன் அமலாக்கத் துறை முன்பாக செவ்வாய்க்கிழமை 12.02.2019 (இன்று ) ஆஜராகியுள்ளார்.

ராபர்ட் வத்ரா மீது அமலாக்கத்துறையினர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுபடி லண்டனில் இருக்கும் பிரையன்ஸ்டன் ஸ்கொயர் வீடு பற்றி தெரிந்துக் கொள்ள இந்தியா டுடே டிவி 6.02.2019 அன்று அங்கு சென்றது. ராபர்ட் வத்ராவுடையதாக கூறப்பட்ட அந்த வீடு காலியாக இருப்பதையும், அது பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியினருக்கு சொந்தமானது என்றும் கண்டறிந்தது. பிரையன்ஸ்டன் ஸ்கொயரில் பல வீடுகள் இருக்கிறது அந்த வீடுகளின் விலை 2001 ஆம் ஆண்டு ரூ10 கோடியாக இருந்தது என்றும் தற்போதைய விலை ரூ23 – ரூ25 கோடியாகவும் இருக்கிறது என்பதையும் கண்டறிந்தது இந்தியா டுடே டிவி.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களைக் கொண்டு வத்ராவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வத்ரா தரப்பிலும் சில ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைமறைவாக இருக்கும் ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள ஒரு சொத்தை பண்டாரி, கடந்த 2010-ஆம் ஆண்டில் வாங்கிய விலைக்கே விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அவரது இமெயில்களை ஆய்வு செய்ததில், பண்டாரிக்கும், வத்ராவின் உதவியாளர் மனோஜ் அரோராவுக்கும் இடையே இமெயில் பரிமாற்றங்கள் இருந்தது தெரியவந்தது. இந்த இமெயில்களின் நம்பகத்தன்மைப் பற்றி இன்னும் யாரும் கண்டறியவில்லை. இதனால் லண்டனில் உள்ள சொத்தின் உண்மையான உரிமையாளர் ராபர்ட் வத்ராவாக இருக்கலாம் என்றும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மூலம் அந்தச் சொத்து வாங்கப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, ராபர்ட் வத்ராவுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் நில மோசடி தொடர்பாக வதேரா மீது அமலாக்கத்துறை மற்றொரு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று அவரது தாயாருடன் ஆஜராகியுள்ளார்.

பீகானிரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதி அருகே உள்ள இடத்தில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் ராஜஸ்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. சம்பந்தப்பட்ட இடத்தை எம்எஸ் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த நிறுவனத்துடன் வத்ராவுக்கு தொடர்பு இருப்பதாகத் அமலாக்கத் துறை குற்றம் சாட்டுகிறது.

Courtesy : India Today Tv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here