ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகாவின் கண்ணீர்

0
451

ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகாவின் கண்ணீர்

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ரோஹித் வெமுலா உயிர் துறந்தார்; உயர் கல்வி நிறுவனங்கள் தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொலைக்களங்களாக இருக்கின்றன என்ற செய்தியை விட்டுச் சென்றார். நட்சத்திரங்களுக்கு ஆசைப்பட்ட ரோஹித்தின் இழப்பை எண்ணி நாடே துக்கம் அனுசரிக்கும்போது, ஜாதிமயப்பட்ட ஊடகங்கள் அவரது தாயார் ராதிகாவின் ரத்தத்தைக் குடிக்க அலைகின்றன.

உயர் ரத்தக் கொதிப்பு காரணமாக பல்கலைக்கழக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த ராதிகாவையும் அவரைக் கவனித்து வந்த ரோஹித்தின் சகோதரியையும் சந்தித்தேன். இந்தத் தேசத்தில் தலித் தாய்மார்கள் படும் வேதனைக்கு நல்ல உதாரணம் ராதிகா. 44 வயதான ராதிகா இன்னும் பெற்ற மகனை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை; அரசு, ஊடகம், பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் கிளைகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் அவர் அல்லல்படுகிறார்.

இதற்கு ஒரு காரணம் ரோஹித்தின் தொலைநோக்கு; ரோஹித்தின் தற்கொலை நடந்த நாளில், மாணவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அவரது மரணத்துக்குக் காரணமான மத்திய அமைச்சர், பி.ஜே.பி எம்.எல்.சி, துணைவேந்தர் ஆகியோர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்வரை போலீசார் ரோஹித்தின் உடலைத் தொடுவதற்குக்கூட அனுமதிக்கவில்லை. தான் உயிரோடு இருந்தால் இந்தப் பெரிய மதச்சார்பற்ற, ஜனநாயக நாட்டில் இதனைச் செய்ய முடியாது என்பது ரோஹித்துக்குத் தெரிந்திருக்கலாம்.
இதனைச் சகித்துக்கொள்ள முடியாத சக்திகள் ரோஹித்தின் பின்னணியைத் தோண்ட ஆரம்பித்தன; அவருடைய தலித் அடையாளத்தைக் காலி செய்வதே முதல் நோக்கம்.

ரோஹித்தின் தந்தை பிற்படுத்தப்பட்ட வத்தேரா சாதியைச் சேர்ந்தவர். ராதிகாவையும் குழந்தைகளையும் விட்டு அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டார். இந்த “ஓடுகாலி”யை மீடியா முன்னிறுத்தியது; இது ராதிகாவுக்குப் பெரும் அவமானத்தையும் துயரத்தையும் கொண்டு வந்தது. மீடியா ராதிகாவிடம் மகனின் இழப்பைப் பற்றிக் கேட்கவில்லை; மகனின் சாதியைப் பற்றிக் கேட்டது. “அவர்கள் நான் மகனைப் பறிகொடுத்த பரிதவிப்பைப் பற்றிக் கேட்கவில்லை. அவனது தலித் அடையாளம் பற்றிக் கேட்டார்கள்” என்கிறார் ராதிகா.

முக்கியக் குற்றவாளியான துணைவேந்தர் அப்பா ராவ், கம்மா ஜாதியைச் சேர்ந்தவர்; அவருக்கு அந்தப் பதவியைப் பெற்றுத்தந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் கம்மா ஜாதிதான்; பல்கலைக்கழகங்கள், போலீஸ், நீதிமன்றங்கள், மீடியா எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துவது கம்மா சாதியினர்தான்.

ராதிகாவை சித்திரவதை செய்து மனம் நோக வைப்பதில் மீடியா பெரும்பங்காற்றியது. ரோஹித் தலித் இல்லை என்று நிரூபிக்க ராதிகாவைத் தொடர்ந்து ரத்தவெறியோடு கேமராக்கள் துரத்தின; ரத்தக்கொதிப்பில் அவர் மருத்துவமனைக்கு வந்தபிறகும் விடாமல் துரத்துகின்றன. ரோஹித்தின் உயிரைப் பறித்தது போதாதா? ராதிகாவின் உயிரும் வேண்டுமா?

ராதிகா தலித் சமூகமான மாலா சாதியைச் சேர்ந்தவர்; கணவரால் கைவிடப்பட்ட பின்னர் மாலா சாதி காலனியில் குழந்தைகளுடன் வாழ்ந்தார்; தையல் தைத்தும், தினக்கூலிக்கு வேலை செய்தும் தனது வியர்வையில் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியவர்; அவருடைய அடையாளத்தைக்கூட அவருக்கும் உயிர்போன அவரது மகனுக்கும் தர மறுக்கிற ஜாதிய ரத்தக் காட்டேரிகளாக மனுதர்மவாதிகளும் மீடியாவும் மாறிப்போனது ஏன்?

(சுஜாதா சுரேபள்ளி எழுதிய கட்டுரையின் சுருக்க வடிவம் இது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்