வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மக்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் மற்றும் புத்த மதத்தினர் வன்முறை வெறியாட்டங்களை நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனால் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள அம்மக்கள் அகதிகளாக அங்கிருந்து வெளியேறி அண்டைநாடுகளான வங்கதேசம் மற்றும் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மரின் ராணுவ வன்முறைக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் முஸ்லிம் மக்களுக்கெதிரான இன அழிப்பு என ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது.

உலக நாடுகள் மத்தியில் எழுந்த எதிர்ப்பால், ரோஹிங்கியா முஸ்லிம்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த ஜன.17ஆம் தேதி, வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளை, ஜன.23ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் மியான்மர் அனுப்ப இரு நாடுகளிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

rohin1

ஒவ்வொரு வாரமும் 15,000 அகதிகளை மியான்மர் திரும்பப் பெற வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மியான்மர் அரசு, வாரம் 1,500 அகதிகளை மட்டுமே திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தின் குதுபலாங் என்னும் அகதிகள் முகாமில் தங்கியுள்ள மியான்மரின் ராகின் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

அதில், ரோஹிங்கியா மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மியான்மர் அரசு பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்; மியான்மரில் அங்கீகரிக்கப்பட்ட இனக் குழுக்களில் ரோஹிங்கியா மக்களையும் சேர்க்க வேண்டும்; ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகியுள்ள ரோஹிங்கியா மக்களுக்குச் சொந்தமான வீடுகள், பள்ளிகள், மசூதிகள் உள்ளிட்டவைகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்; ரோஹிங்கியா மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை, கொலை, கொள்ளை ஆகியவற்றிற்கு ராணுவம் பொறுப்பேற்க வேண்டும்; மக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரித்து, அவர்களது படங்களை அரசு முகநூல் மற்றும் ஊடகங்களில் வெளியிடுவதை நிறுத்த வேண்டும் எனவும், இந்தக் கோரிக்கைகளை மியான்மர் திரும்புவதற்கு முன்னர் நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: Reuters

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here