டெல்லியிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு உள்ளூர் மக்கள் உதவி செய்தனர்.

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் மற்றும் புத்த மதத்தினர் நடத்திய வன்முறைச் சம்பவங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்கள், அங்கிருந்து வெளியேறி அண்டைநாடுகளான வங்காளதேசம் மற்றும் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மரிலிருந்து வந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், ஜம்மு, ஹைதராபாத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியின் கலிந்தி கஞ்ச் பகுதியிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஞாயிற்றுக்கிழமையன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.

fire

இந்த முகாமில் சுமார் 220க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வந்தனர். இந்த விபத்தினையடுத்து, அவர்கள், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகேயுள்ள மைதானம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அப்பகுதி மக்கள் உணவும், உடைகளையும் வழங்கியுள்ளனர். இது குறித்து பேசிய ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், “பாதிக்கப்பட்ட எங்களுக்கு இங்குள்ள மக்களும், போலீசாரும் அதிகளவில் உதவி செய்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் 285, 337 336 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நன்றி: ANI

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்