ரூ.824 கோடி பண மோசடி : கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் கைது

0
619

பல்வேறு வங்கிகளில் ரூ.824 கோடி பண மோசடி செய்த ‘கனிஷ்க்’ நகை நிறுவன நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார்
ஜெயினை சென்னையில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை, நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையைச் சேர்ந்தவர் பூபேஷ் குமார் ஜெயின். மனைவி நீட்டா ஜெயின். இவர்கள் சென்னைதியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் “கனிஷ்க்’ என்ற பெயரில் தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டின நகைகளைத் தயாரித்து, விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தினர்.

இந்நிறுவனம், நகை இருப்பை அதிகரித்தும் போலியான ஆண்டு நிதி அறிக்கை தயாரித்து அதிக லாபம் காட்டியும் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என மொத்தம் 14 வங்கிகளில் ரூ.824.15 கோடி கடன் பெற்றனர்.
இக்கடனுக்காகச் செலுத்தப்பட வேண்டிய வட்டி, அசல் தொகையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து செலுத்தவில்லை. இதை அண்மையில் கண்டறிந்த பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம், பெங்களூருவில் உள்ள சிபிஐ வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்புப் பிரிவில் புகார் செய்தது.

அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், பூபேஷ்குமார், நீட்டா ஜெயின் உள்பட 6 பேர் மீது கடந்த மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், பூபேஷ்குமார் வீடு, அலுவலகம், தொழிலகம்
உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இம்மோசடி குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை செய்தது. இந்த மோசடியில் கனிஷ்க் நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள், கனிஷ்க் நிறுவனம், அதன் இயக்குநர்கள் பூபேஷ்குமார், அவரது மனைவி நீட்டா ஜெயின், பங்குதாரர்கள் உள்பட 6 பேர் மீது மார்ச் 23-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புக்கத்துறையில் உள்ள ரூ.48 கோடி மதிப்புள்ள நகை தொழிலகத்தை அமலாக்கத் துறை முதலில் முடக்கியது. இந்நிலையில் அந்த நிறுவனம், வங்கியில் வைத்திருந்த ஒரு நிரந்தர வைப்புக்
கணக்கு மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் நடத்தியிருப்பதும், மற்றொரு நிறுவனத்துக்கு கணக்கில் வராத ரூ.300 கோடி பணத்தை அனுப்பியிருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த கணக்கில் இருந்த ரூ.143 கோடி பணத்தை அமலாக்கத் துறை முடக்கியது.

இந்த வழக்கில் இது வரை அமலாக்கத்துறை கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான மொத்தம் ரூ.191 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. கனிஷ்க் நிறுவனத்தின், மேலும் பல சொத்துகளை முடக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் ‘கனிஷ்க்’ நகை நிறுவன நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயினை சென்னையில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களைப் பின்பற்றி சிபிஐயும் விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here