ரூ.8100 கோடி கருப்புப் பண மோசடி வழக்கில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 4 இயக்குநர்களுக்கு எதிராக, பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவை பிறப்பிக்கக் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் என்ற நிறுவனம், வங்கிகளில் வாங்கிய கடனை தவறாகப் பயன்படுத்தி, வேறு வழிகளில் செலவு செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது ரூ.8100 கோடி மோசடி செய்ததாக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் நிதின் ஜயந்திலால் சந்தேசரா, சேதன் குமார் ஜயந்திலால் சந்தேசரா, தீப்தி சேதன் சந்தேசரா, ஹிதேஷ் குமார் நரேந்திரபாய் படேல் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, இந்த 4 இயக்குநர்களுக்கு எதிராக காலவரம்பற்ற, பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவு பிறப்பிக்கக் கோரி, டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதி சித்தார்த் சர்மா, வரும் 5-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here