ரூ.59 கோடி மதிப்பில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகம்: முதல்வர் திறந்து வைத்தார்

0
472

சென்னை, பெருங்குடி-கொட்டிவாக்கம் கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தில், 2,69,205 சதுர அடி கட்டட பரப்பளவில், 59 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தினை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில், சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்களுக்கு குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட வகுப்பறைகளும், கணினி மயமாக்கப்பட்ட நூலகமும், அந்நூலகத்தில் ஒரே நேரத்தில் 180 மாணவர்கள் இணைய தளத்தை பயன்படுத்தக்கூடிய கணினி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், நூலகத்தில் சுமார் 50,000 நூல்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மின் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர பல்கலைக்கழக வளாகம் முழுவதிலும் இணையதள வசதியுடன் கூடிய கம்பியில்லா மண்டல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இளநிலை சீர்மிகு சட்டப்படிப்பு மாணவர்களுக்கென குளிரூட்டப்பட்ட 25 நவீன வகுப்பறைகளைக் கொண்ட கட்டடமும், முதுநிலை சீர்மிகு சட்டப்படிப்பு மாணவர்களுக்கென குளிரூட்டப்பட்ட 25 நவீன வகுப்பறைகளைக் கொண்ட கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. அக்கட்டடங்கள் ஒவ்வொன்றிலும் 3 கருத்தரங்க கூடங்களும், மாதிரி நீதிமன்ற அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் தலா 75 அறைகளுடன் கூடிய 2 விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்