ரூ. 40 ஆயிரம் கோடியை பாதுகாக்கத்தான் பட்னாவிஸை அவசர அவசரமாக முதல்வராக்கினோம்: பாஜக தலைவர்

0
909

மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்த  ரூ. 40 ஆயிரம் கோடி பணத்தை பாதுகாக்கத்தான் மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் அவசரம் அவசரமாக முதல்வரானார் என்றும்,பதவியேற்ற 15 மணி நேரத்தில் பணம் மொத்தமும் பத்திரமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் அனந்த் குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார். அவரது கருத்து  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

இதுதொடர்பாக அனந்த் குமார் ஹெக்டே கூறியதாவது-

மகாராஷ்டிராவில் பதவியேற்ற 80 மணி நேரத்திற்குள்ளாக எங்களது பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எதற்காக நாங்கள் இந்த நாடகத்தை ஆட வேண்டும்?. மெஜாரிட்டி இல்லை என்பது எங்களுக்கு தெரியும். இருந்தும் இதை ஏன் செய்தோம் என்று தெரியுமா?

இந்த கேள்வியை பலரும் எங்களிடம் கேட்கின்றனர். அதற்கு பதில் சொல்கிறேன். ரூ. 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஒருவேளை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து விட்டால், அந்தப் பணம் மொத்தமும் அவர்களிடம் சென்று விடும். 

இந்தப் பணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் முன்கூட்டியே தீர்மானத்து இந்த நாடகத்தை அரங்கேற்றினோம்.  மாநிலத்தின் நலனுக்காக இவ்வாறு செய்தோம். 

ரூ. 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் மத்திய அரசின் வசம் சென்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்த எங்களுக்கு 15 மணி நேரம் தேவைப்பட்டது. அந்தப் பணம் பத்திரமாக உள்ளது என்றார். 

அனந்த் ஹெக்டேவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரது கருத்தை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘அனந்த் குமார் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. நான் முதல்வராக இருந்தபோது கொள்கை ரீதியில் எந்த முடிவும் எடுக்கவில்லை. நிதி விவகாரத்தை அரசின் நிதித்துறை கவனித்துக் கொள்ளும்.

புல்லட் ரயில் திட்டத்தில் மகாராஷ்ர அரசின் பங்கு என்பது திட்டத்திற்கான இடத்தை கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதுதான். நாங்கள் மத்திய அரசிடம் எந்தப் பணமும் கேட்கவில்லை. எந்தப் பணமும் மத்திய அரசுக்கு திருப்பி அளிக்கப்படவில்லை’ என்றார்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவின் மகாராஷ்டிரா விரோத கொள்கை வெளிப்பட்டு விட்டது. கூட்டாட்சி தத்துவம் உடைத்தெறியப்படுவதை பார்க்கிறோம். மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது ரூ. 40 ஆயிரம் கோடி என்றால் அதை வைத்து மக்கள் நலத்திட்டங்கள், விவசாயிகள் கடன் போன்றவற்றை செய்து முடித்திருக்கலாம். எனவே மகாராஷ்டிராவுக்கு எதிராக பாஜக சதி செய்திருப்பதை பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக், ரூ. 40 ஆயிரம் கோடி போன்ற மிகப்பெரிய தொகையை திருப்பி அனுப்புவது என்பது முடியாத காரியம். தனது தோல்வியை மறைப்பதற்காக பாஜக இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பு வருகிறது என்கிறார்.

சிவசேனாவின் சஞ்சய் ராவத் ரூ. 40 ஆயிரம் கோடி திருப்பி அனுப்பப்பட்டது என்றால் தேவேந்திர பட்னாவிஸ் மிகப்பெரும் துரோகத்தை மகாராஷ்டிராவுக்கு செய்துவிட்டார் என்றுதான் அர்த்தம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here