மத்திய அரசுடன் மோதல் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலக தயாராகி வருவதாக சிஎன்பிசி டிவி18 செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் ரிசர்வ் வங்கி தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றி வருகிறது . கடந்த வாரம் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரல் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கிக்கு இருக்கும் சுயாட்சியையும், சுதந்திரத்தையும் மத்திய அரசு மதிக்கவில்லை. மத்திய அரசின் நெருக்கடிக்கு உட்பட்டு செயல்படுகிறோம் என்று குற்றம்சாட்டி இருந்தார்.

ரிசர்வ் வங்கி தொடர்புடைய ஒவ்வொரு முடிவுகளையும் மத்திய அரசு குறுகிய கண்ணோட்டத்தில் டி20 கிரிக்கெட் போட்டி போன்று எடுக்கிறது. ஆனால், நாங்கள் டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதைப் போன்று நிதானமாக முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளது என்றும் கூறியிருந்தார். மத்திய அரசுடன் நடந்து வரும் மோதலின் தொடர்ச்சியாக அவர் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடி தரும் வகையில் ரிசர்வ் வங்கியைக் குற்றம்சாட்டி அருண் ஜெட்லி பேசினார். ‘‘2008 முதல் 2014-ஆம் ஆண்டுவரை, வங்கிகள் தங்கள் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அனைவருக்கும் கடன் அளித்தன. யாருக்குக் கடன் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என்ற பாகுபாடு இல்லாமல் கடன் கொடுத்தன. இதைத் தடுப்பதற்கு ரிசர்வ் வங்கி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போதே ரிசர்வ் வங்கி இதைத்தடுக்காத காரணத்தால்தான் இப்போது வாராக்கடன் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது’’ எனக் கூறினார்.

இதுமட்டுமின்றி, கடந்த ஓராண்டில் மட்டும் ஆறு முக்கியமான பிரச்சினைகளில் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் முரண்பட்டிருக்கின்றன. வட்டிவிகிதம் தொடர்பான முரண்பாடு, நீரவ் மோடி விவகாரம், பொதுத் துறை வங்கிகளை முறைப்படுத்தும் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் முரண்பாடு நிலவி வருகிறது.

ஏற்கெனவே ரகுராம் ராஜன் ஆளுநர் பதவியிலிருந்து சென்றபோது, மோதலின் காரணமாகவே அவர் சென்றார் என்று மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உர்ஜித் பட்டேல் குஜராத்காரர், தங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பார் என்ற அடிப்படையில் அவரை ரிசர்வ் வங்கி ஆளுநராக பிரதமர் மோடி பதவியில் அமர்த்தியதாக புகார்கள் எழுந்தன. ஆனால் அவருடனும் மத்திய அரசுக்கு தற்போது மோதல் எழுந்துள்ளது.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here