2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க, இந்திய விமானப்படைக்கு கட்டணமாக 29 கோடியே 41 லட்சம் ரூபாயை ரிசர்வ் வங்கி செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய விமானப்படை விமானம் மூலம் புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை, நாடு முழுவதும் கொண்டு சேர்க்க விமானப்படைக்கு ரிசர்வ் வங்கி செலுத்திய கட்டணம் தொடர்பான விவரங்களை ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.

அதன் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களில் இந்திய விமானப்படை ரூபாய் நோட்டுகளை கொண்டு சேர்க்க ரிசர்வ் வங்கி மற்றும் பணம் அச்சடிக்கும் கழகத்துக்கு 29 கோடியே 41 லட்சம் ரூபாயை கட்டணமாக நிர்ணயித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணமதிப்பிழப்புக்கு நடவடிக்கைக்குப் பிறகு 2016-இல் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி 2015ஆம் ஆண்டு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க செலவழித்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக 7 ஆயிரத்து 965 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக இந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பால் 2016 – 2017ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் வருவாய் 23.5 சதவீதம் குறைந்துவிட்டதாகவும், அதே நேரத்தில் செலவு 107.8 சதவீதம் அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்