ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், வங்கிக் கடன் தொடர்பான புதிய கொள்கை முடிவு எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற முறைகேடுகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கத் தவறி விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ரிசர்வ் வங்கியில் சேமிப்பாக உள்ள பணத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிக பணத்தை மத்திய அரசு கேட்பதாகவும் புகார் எழுந்தது. இதனால் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்ய உர்ஜித் படேல் முடிவு செய்திருப்பதாகவும், பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசியபின் தமது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதிகளை எளிமைப்படுத்துவது, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டைத் தீர்ப்பது போன்ற அம்சங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடும் முடிவை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரிசர்வ் வங்கியைக் கட்டுப்படுத்தும் 7வது சட்டப் பிரிவையும் கைவிட்டுவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்