அயோத்தியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், சர்ச்சைக்கு உள்படாத பகுதியை அதன் உரிமையாளர்களிடம் திருப்பியளிப்பதற்கு அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

1993-ஆம் ஆண்டு நில கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ், அயோத்தியில் கரசேவகர்களால் இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டடம் அமைந்திருந்த 0.313 ஏக்கர் இடம் உள்பட 2.77 ஏக்கர் நிலம், அதை சுற்றிய நிலம் என்று மொத்தம் 67.703 ஏக்கர் மனுதாரரால் (மத்திய அரசு) கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து 1994ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கில், சர்ச்சைக்குரிய 0.313 ஏக்கர் நிலத்தைத் தவிர, சர்ச்சைக்கு உள்படாத எஞ்சிய 67.390 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் மத்திய அரசு விரும்பும்பட்சத்தில் திருப்பி அளிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தநிலையில், ராமஜென்மபூமி தொடர்பான மற்றொரு வழக்கில் கடந்த 2003ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அயோத்தி நில விவகாரத்தில், இஸ்மாயில் ஃபரூக்கி வழக்குக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது சர்ச்சைக்குரிய 0.313 ஏக்கர் நிலத்தோடு மட்டுமல்லாமல், அதை சுற்றி கையகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்துக்கும் சேர்த்து அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் நீட்டித்துவிட்டது.

இதனிடையே, இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய நிலமில்லாது எஞ்சிய பிற நிலப்பகுதியில் தங்களுக்கு சொந்தமான 42 ஏக்கர் நிலத்தை பிரித்து திருப்பி அளிக்கும்படி மத்திய அரசிடம் ராம ஜென்ம பூமி நியாஸ் அமைப்பு கோரிக்கை மனு அளித்துள்ளது. இதன்படி, சர்ச்சைக்குரிய 0.313 ஏக்கர் நிலத்தை தவிர்த்து, 1993ஆம் ஆண்டு சட்டப்படி கையகப்படுத்தப்பட்ட எஞ்சிய நிலத்தை அதன் உரிமையாளர்களுக்கு திருப்பியளிக்க மத்திய அரசுக்கு அனுமதியளிக்க வேண்டும். சர்ச்சைக்குள்படாத அயோத்தி நிலப் பகுதிகளை ராம ஜென்ம பூமி நியாஸ், ராம் லல்லா உள்ளிட்ட உரிமையாளர்களிடம் திருப்பி அளிப்பதில் மத்திய அரசுக்கு ஆட்சேபம் இல்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, அந்த மசூதி இருந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை கடந்த 1993-ஆம் ஆண்டு மத்திய அரசு கையகப்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய கட்டடம் அமைந்திருந்த இடம் உள்பட 2.77 ஏக்கர் நிலப்பகுதியை ராம் லல்லா அமைப்பு, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (ஜன. 29) நடைபெறுவதாக இருந்தது. எனினும், விசாரணை நடத்தும் அரசியல் சாசன அமர்வைச் சேர்ந்த 5 நீதிபதிகளில் ஒருவர், நீதிமன்றத்துக்கு வர முடியாததால் அந்த விசாரணை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் உரிய வேகத்தில் விசாரிக்கவில்லை என்று மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்திருந்தார். தகாத உறவு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது போன்ற வழக்குகளை விரைந்து விசாரித்தது போல, அயோத்தி விவகாரத்திலும் உச்சநீதிமன்றம் முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய நிலப்பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளை உரிமையாளர்களிடம் திருப்பியளிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“ராமர் கோயிலுக்கான நிலம்’

ராம ஜென்ம பூமி நியாஸ் அமைப்புக்கு மத்திய அரசு திருப்பியளிக்க விரும்பும் நிலப்பகுதி, ராமர் கோயில் அமைக்கும் நோக்கில் வாங்கப்பட்டதாக விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) தெரிவித்துள்ளது:

இதுகுறித்து விஹெச்பி-யின் தலைவர் அலோக் குமார் மேலும் கூறுகையில், அயோத்தி நிலப் பகுதிகளை உரிமையாளர்களிடம் திருப்பி அளிப்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு அனுமதி கோரியிருப்பது வரவேற்கத் தக்கது.

அயோத்தி விவகாரத்தில் அனைத்தும் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது என்றார்.


ராம ஜென்ம பூமி நியாஸ் என்ற அமைப்பு, அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்காக விஹெச்பி-யால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

“சர்ச்சைக்குரிய நிலம் குறித்து மாற்றமில்லை’

அயோத்தி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், சர்ச்சைக்குரிய நிலப்பகுதி தொடர்பான நிலையில் எந்த மாற்றமும் கோரவில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விளக்கமளித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் வரவேற்பு

அயோத்தியில் ராம ஜென்ம பூமி நியாஸ் அமைப்புக்குச் சொந்தமான நிலத்தைத் திருப்பியளிக்க உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு அனுமதி கோரியதை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றுள்ளார். அயோத்தி நிலத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை சர்ச்சைக்குள்படாத பகுதியிலிருந்து நாம் தொடங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

அயோத்தியில் ராமர் கோயில் எழுப்ப வலியுறுத்தி வரும் ஹிந்து அமைப்புகளை திருப்திப்படுத்தவே, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here