ஒரு நாள் ஆட்டத்தில் ராணுவத் தொப்பி அணிய இந்திய வீரர்களுக்கு அனுமதி தரப்பட்டிருந்தது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினார்கள். அத்துடன் இந்தப் போட்டிக்கான சம்பளத்தையும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முடிவு செய்தனர்.

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. புல்வாமா விவகாரத்தை வைத்து இந்திய அணியினர் அரசியலாக்குவதாக கூறி, ஐசிசி தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் கிரிக்கெட் வாரியத்தினர் கடிதம் எழுதினர்.

இந்திய அணி வேறு எதற்கோ அனுமதி வாங்கி விட்டு, ராணுவ தொப்பியை அணிந்து விட்டனர் என பிசிபி தலைவர் இஷான் மணி கூறியிருந்தார்.

பாகிஸ்தான் வெளியுறவத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரோஷி ட்விட்டரில் கூறுகையில், ” இந்திய கிரிக்கெட் தங்களின் அணிக்குரிய தொப்பியை அணிந்து விளையாடுவதற்கு பதிலாக இந்திய ராணுவத்தின் தொப்பி அணிந்து விளையாடியதை இந்த உலகமே பார்த்தது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) பார்க்கவில்லையா. இந்த விஷயத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளிக்கும் முன், ஐசிசி கவனித்து, இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐசிசியின் பொறுப்பாகும் ” எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயல்களை இந்திய அணி நிறுத்திக்கொள்ளாவிட்டால், உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும் என்று பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரி ட்வி்ட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஐசிசி பொது மேலாளர் கிளேயர் புர்லோங் கூறியதாவது: தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காக ராணுவ தொப்பிகள் அணியவுள்ளதாகக் கூறி பிசிசிஐ ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்தது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here