ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் ; பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் அமோக வெற்றி

0
919

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 961 வார்டுகளிலும், பாஜக 737 வார்டுகளிலும்  வெற்றிப் பெற்றுள்ளது. 

ராஜஸ்தானின் 33 மாவட்டங்களில், 24 மாவட்டங்களில் உள்ள 49 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த வாரம் சனிக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 3 மாநகராட்சிகள், 18 நகராட்சி கவுன்சில், 28 நகராட்சிகளுக்குத் தேர்தல் நடந்தது. இதில் மொத்தமாக 71.53 சதவீத வாக்குகள் பதிவாகின.

49 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2105 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் இது .  அதிகமாக  நசிராபாத் நகராட்சியில் 91.67சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது . உதய்பூர் நகராட்சியில் குறைந்த அளவாக 53 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. 

49 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 23 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது . பாஜக 6 இடங்களிலும் , மற்றவர்கள் 20 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கிறார்கள் . 

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 2,105 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 961 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது . பாஜக கடந்த 10 ஆண்டுகளாக இங்கு ஆண்டு வந்த நிலையில் 737 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 16 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வென்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான தேர்தல் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றி கிடைத்திருப்பது, காங்கிரஸ் முகாமில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இது குறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெற்றிருக்கிறது. மக்கள் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். இது எங்களின் அரசாங்கத்துக்கு மக்கள் அளித்திருக்கும் ஆதரவை காட்டுகிறது. அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். நாங்கள் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.

வெற்றி குறித்து பேசிய காங்கிரஸ் முக்கிய பிரமுகரும், அமைச்சருமான பிரதாப் சிங், ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் 3இல் 2 பங்கு இடங்களை காங்கிரஸ் வென்றிருக்கிறது. இது பாஜகவுக்கு கிடைத்த பாடம். 370வது சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோயில் ஆகிய விவகாரங்களில் பாஜகவை மக்கள் நிராகரித்து உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here